ரூ.8.80 கோடி ஜிஎஸ்டி மோசடி : பஞ்சாபில் தொழிலதிபர் கைது
ரூ.8.80 கோடி ஜிஎஸ்டி மோசடி : பஞ்சாபில் தொழிலதிபர் கைது
ADDED : டிச 24, 2025 10:24 PM

லுாதியானா: பஞ்சாபில் ரூ.8.80 கோடி ஜிஎஸ்டி செலுத்தாமல் ஏமாற்றிய தொழிலதிபரை அதிகாரிகள் கைது செய்தனர்.
பஞ்சாபில் உலோகக் கழிவுகளை சேகரித்து விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வந்த தொழிலதிபர், முறையற்ற வகையில் போலியான ஆவணங்கள் மூலம் உள்ளீட்டு வரி வரவு பெற்று அதன் மூலம் ஜிஎஸ்டி வரியை செலுத்தாமல் ஏமாற்றியதாக குற்றம்சாட்டப்பட்டது.அதன் அடிப்படையில் நேற்று டேரா பஸ்ஸியில் உள்ள அவரது நிறுவனத்திற்கு சொந்தமான பல இடங்களில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதை தொடர்ந்து தொழிலதிபர் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து இன்று ஜிஎஸ்டி அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கை:
பஞ்சாபில் இரும்பு மற்றும் எக்கு துறைகளில் நடக்கும் போலி பில்லிங் மோசடிகளைக் கண்டறிய மத்திய ஜிஎஸ்டி மற்றும் ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குநரகம் எடுத்து வரும் தீவிர நடவடிக்கையின் ஒரு பகுதியாக கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் உலோகக் கழிவுகளை சேகரித்து விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார்.8.80 கோடி ரூபாய் மதிப்பிலான ஜிஎஸ்டியை தவிர்க்க மோசடி வழிகளை கையாண்ட நிலையில் கைது செய்யப்பட்டார்.2025-ஆம் ஆண்டில் பஞ்சாபில் வரி ஏய்ப்பிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் தீவிர சோதனைகளில் இதுவும் ஒன்றாகும். முன்னதாக, செப்டம்பர் மாதத்தில் ரூ.385 கோடி போலி பில்லிங் மோசடியும், டிசம்பர் தொடக்கத்தில் ரூ.54 கோடி மோசடியும் கண்டறியப்பட்டது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

