முதியோர் சலுகை கட்டணம் ரத்தால் ரூ.9,000 கோடி கூடுதல் வருவாய்
முதியோர் சலுகை கட்டணம் ரத்தால் ரூ.9,000 கோடி கூடுதல் வருவாய்
ADDED : ஏப் 11, 2025 02:03 AM

புதுடில்லி,: 'மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை வாபஸ் பெறப்பட்டுள்ள ஐந்தாண்டுகளில், ரயில்வேக்கு, 9,000 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது' என, தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த தகவல் உரிமை சட்ட ஆர்வலர் சந்திரசேகர் கவுர் கூறியதாவது:
ரயிலில் பயணிக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு, 40 சதவீத கட்டண சலுகை அளிக்கப்பட்டது. கடந்த 2020, மார்ச் 20லிருந்து இந்த சலுகை ரத்து செய்யப்பட்டது.
இதனால் கடந்த ஐந்தாண்டுகளில், ரயில்வே துறைக்கு, 9,000 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது என்ற தகவலை, சி.ஆர்.ஐ.எஸ்., எனும் இந்திய ரயில்வே தகவல் அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த காலகட்டத்தில், 31.35 கோடி மூத்த குடிமக்கள் ரயிலில் பயணம் செய்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
'ரயில்களில் மீண்டும் மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை அளிக்க வேண்டும்' என, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் பலமுறை, பல கட்சிகளின் எம்.பி.,க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அப்போதெல்லாம் அவர், 'குறைந்த கட்டணத்தில் தான் ரயில்வே சேவைகள் வழங்கப்படுகின்றன. உதாரணமாக, 100 ரூபாய் மதிப்புள்ள சேவைகளை பெறும் மக்கள், ரயில் கட்டணமாக, 54 ரூபாய்தான் கொடுக்கின்றனர்' எனக் கூறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.