கூட்டுறவு சங்க வாகனங்களுக்கு டீசலுக்கு ரூ.239 கோடி செலவு
கூட்டுறவு சங்க வாகனங்களுக்கு டீசலுக்கு ரூ.239 கோடி செலவு
ADDED : பிப் 20, 2025 06:47 AM

கோலார்: “கோலார் - சிக்கபல்லாபூர் மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க வாகனங்களுக்கு கடந்த 5 ஆண்டுகளில் டீசல் போடுவதற்காக, 239 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது,” என, பங்கார்பேட்டை காங்கிரஸ் எம்.எல்.ஏ., நாராயணசாமி குற்றச்சாட்டு கூறி உள்ளார்.
இதுகுறித்து நேற்று அவர் அளித்த பேட்டி:
கோலார் - சிக்கபல்லாபூர் மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்க வாகனங்களுக்கு, கடந்த 5 ஆண்டுகளில் டீசல் போடுவதற்காக மட்டும் 239 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது. இதில் உற்பத்தியாளர் சங்க தலைவரும், மாலுார் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வுமான நஞ்சேகவுடா வாகனத்திற்கு மட்டும் 20 லட்சத்து, 56 ஆயிரத்து 193 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
டேங்கர் பால் வினியோக வாகனங்களுக்கு டீசல் போட 13 கோடியே 22 லட்சத்து 98 ஆயிரத்து 336 ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.
தொழிற்சங்க அதிகாரிகளின் குத்தகை வாகனங்களுக்கு 5 கோடியே 88 லட்சத்து 25 ஆயிரத்து 425 கோடி ஆகி உள்ளது. டீசல் என்ற பெயரில் பிரமாண்ட முறைகேடு நடந்துள்ளது. இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த வெண்டும் என்று அரசுக்கு கடிதம் எழுதுவேன். தவறு செய்தவர்களை விட மாட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
கோலார் மாவட்டத்தில் காங்கிரசுக்கு நான்கு எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். ஆனால் அவர்களுக்குள் ஒற்றுமை இல்லை. சொந்த கட்சி எம்.எல்.ஏ., மீதே, நாராயணசாமி குற்றஞ்சாட்டியிருப்பது, கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

