''அன்று ரூ.34 லட்சம்; இன்று ரூ.2,200 கோடி'': பிரதமர் மோடி சொல்லும் புள்ளிவிபரம் என்ன?
''அன்று ரூ.34 லட்சம்; இன்று ரூ.2,200 கோடி'': பிரதமர் மோடி சொல்லும் புள்ளிவிபரம் என்ன?
ADDED : மே 28, 2024 11:51 AM

புதுடில்லி: மன்மோகன் சிங் தலைமையிலான 10 ஆண்டுகால ஆட்சியின் போது அமலாக்கத்துறை வெறும் ரூ.34 லட்சம் மட்டுமே பறிமுதல் செய்தது. ஆனால், எனது தலைமையிலான 10 ஆண்டுகளில் ரூ.2,200 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது'' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு பிரதமர் மோடி அளித்த பேட்டி: ஒடிசாவின் தலைவிதி மாறப்போகிறது. ஜூன் 4 தான் தற்போதைய ஒடிசா அரசின் காலாவதி தேதி; ஜூன் 10ல் ஒடிசாவில் பா.ஜ., முதல்வர் பதவியேற்பார்.
மேற்குவங்கத் தேர்தலில் திரிணமுல் காங்கிரஸ் கட்சி பிழைப்புக்காக போராடுகிறது. கடந்த சட்டசபைத் தேர்தலில் நாங்கள் 3 எம்எல்ஏ.,வாக இருந்தோம், பின்னர் அம்மாநில மக்கள் எங்களுக்கு 80 இடங்களை கொடுத்தனர். இந்த முறை மேற்கு வங்கத்தில் பா.ஜ., பெரிய வெற்றியைப் பெறும்.
எதிர்க்கட்சிகள்
எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை இருளில் வைத்து அவர்கள் (எதிர்க்கட்சியினர்) கொள்ளையடிக்கிறார்கள். எனவே அவர்களை நான் எச்சரிக்க விரும்புகிறேன். வரப்போகும் நெருக்கடியை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய நேரம்தான் இந்த தேர்தல். எனவே இது குறித்து மக்களுக்கு விளக்கமளித்து வருகிறேன்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உணர்வு மீறப்படுகிறது; அதுவும் ஓட்டு வங்கி அரசியலுக்காக மீறப்படுகிறது. தலித்துகள், பழங்குடியினரின் நலம் விரும்பிகள் என்று தங்களை அழைத்துக் கொள்பவர்கள் உண்மையில் அவர்களுக்குப் பரம எதிரிகள். எனது தலித், பழங்குடியினர், ஓபிசி சகோதர, சகோதரிகளின் உரிமைகளுக்காக போராடுவேன்.
ரூ.2,200 கோடி பறிமுதல்
மத்திய அரசு அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ போன்றவற்றை பயன்படுத்தி வருவதாக எதிர்க்கட்சிகள் கூறுவதில் என்ன ஆதாரம் இருக்கிறது? அவர்களின் குப்பையை உரமாக மாற்றி, அதில் இருந்து நாட்டுக்கு நல்லவற்றை விளைவிப்பேன். மன்மோகன் சிங் ஆட்சியில் 10 ஆண்டுகளில் ரூ.34 லட்சம் மட்டுமே அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் ரூ.2,200 கோடியை பறிமுதல் செய்துள்ளது. 2,200 கோடி ரூபாயை வெளிக்கொண்டுவந்தவரை மதிக்க வேண்டும், துஷ்பிரயோகம் செய்யக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.