திருமலை திருப்பதியில் ஒரே நாளில் குவிந்தது ரூ.97 கோடி!பக்தர்கள் போட்டிபோட்டு காணிக்கை அளித்தது ஏன்?
திருமலை திருப்பதியில் ஒரே நாளில் குவிந்தது ரூ.97 கோடி!பக்தர்கள் போட்டிபோட்டு காணிக்கை அளித்தது ஏன்?
UPDATED : ஜூலை 16, 2026 09:41 PM
ADDED : ஜூலை 16, 2026 09:31 PM

திருப்பதி: திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நன்கொடையாளர்களுக்கான சலுகைகள் குறைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானதை அடுத்து ஒரே நாளில் 2,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் போட்டிப்போட்டு 96.98 கோடி ரூபாயை காணிக்கையாக வழங்கினர்.
ஆந்திராவின் திருப்பதி திருமலையில் உள்ள புகழ்பெற்ற ஏழுமலையான் கோவிலில் உலகம் முழுதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் தரிசனம் செய்து வருகின்றனர். திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிர்வகித்து வரும் இந்த கோவிலுக்கான நன்கொடையாளர்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.
கோவில் தரவுகளின்படி, 1.97 லட்சம் பேர் பதிவு செய்யப்பட்ட நன்கொடையாளர்களாக உள்ளனர். இவர்களில், 1.5 லட்சம் பேர் 1 லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேல் அளித்துள்ளனர்; 22,000 பேர் 10 லட்சத்துக்கும் அதிகமாக நன்கொடை அளித்துள்ளனர். கடந்த நான்கு மாதங்களில் மட்டும் 10 லட்சம் ரூபாய் நன்கொடை அளித்தவர்களின் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரித்துள்ளது.
நன்கொடையாளர்களுக்கு வாழ்நாள் முழுதும் தரிசனத்தில் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுவதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. சிறப்பு நுழைவு தரிசனம், கருவறைக்கு அருகில் உள்ள சுபதம் பகுதி வழியாக அனுமதி, 'பிரேக் அப்' தரிசனம், விடியற்காலை வழிபாட்டில் பங்கேற்கும் சுப்ரபாத சேவை, கல்யாணோற்சவம் ஆகியவற்றில் பங்கேற்பது, தங்கும் வசதிகள் மற்றும் லட்டு, பட்டு வஸ்திரங்கள், தங்கம் மற்றும் வெள்ளி நாணய பரிசுகள் ஆகியவை இந்த சலுகைகளில் அடங்கும்.
இந்நிலையில், நன்கொடை கொள்கைகளில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சமீபத்தில் பல்வேறு மாற்றங்களை அறிவித்தது. புதிய கொள்கையின்படி, தனி நபர்களுக்கு 20 ஆண்டுகளுக்கும், நிறுவனங்கள் அல்லது அறக்கட்டளைகளுக்கு 15 ஆண்டுகளுக்கு மட்டுமே நன்கொடையாளர் சலுகைகள் செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்பு, 50 லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேல் நன்கொடை அளித்தவர்கள், ஆண்டுதோறும் மூன்று முறை சுப்ரபாத சேவையில் பங்கேற்கும் உரிமையை பெற்றிருந்தனர். புதிய கொள்கையின்படி, இது இனி ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் உரிமையாக மாற்றப்பட்டுள்ளது. இதுபோல், பல்வேறு மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன. இந்த புதிய நடைமுறை புதிதாக நன்கொடை அளிப்பவர்களுக்கு மட்டுமே, ஏற்கனவே வழங்கியவர்களுக்கு பழைய முறையே தொடரும் என அறிவிக்கப்பட்டது.
புதிய விதிமுறைகள் ஜூலை 16 முதல் அமலுக்கு வரும் என தேவஸ்தானம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், ஜூலை 15 முதல் ஏராளமானோர் போட்டிப்போட்டு நன்கொடைகளை வழங்கினர். அதன்படி, 24 மணி நேரத்தில் 96.98 கோடி ரூபாய் காணிக்கை வசூலானதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
'மொத்தம் 2,460 பேர் நன்கொடை அளித்தனர். இதில், 1,212 பேர் 1 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரையிலும், 1,246 பேர், 10 லட்சம் முதல் 25 லட்சம் ரூபாய் வரையிலும் நன்கொடை அளித்தனர். இரு பக்தர்கள் 1 கோடி ரூபாய்க்கும் அதிகமாக நன்கொடை வழங்கினர்' என, அவர்கள் கூறினர்.
