நாடு முழுதும் பொது சிவில் சட்டம் ஆர்.எஸ்.எஸ்., பாகவத் வலியுறுத்தல்
நாடு முழுதும் பொது சிவில் சட்டம் ஆர்.எஸ்.எஸ்., பாகவத் வலியுறுத்தல்
ADDED : ஏப் 02, 2026 06:09 PM

டேராடூன்: ''உத்தரகண்டை பின்பற்றி நாடு முழுதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். சமூகத்தை ஒன்றிணைக்க இது மிகவும் அவசியம்,'' என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் வலியுறுத்தி உள்ளார்.
உத்தரகண்டில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநில அரசு, கடந்த ஆண்டு ஜனவரியில், யு.சி.சி., எனப்படும், பொது சிவில் சட்டத்தை, நாட்டிலேயே முதல் மாநிலமாக அமல்படுத்தியது. இதன்படி, அனைத்து சமூகத்தினருக்கும் ஒரே மாதிரியான சட்டம் அமலானது. திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும், 'லிவ் இன்' உறவுகளை பதிவு செய்வது கட்டாயம், பெண்களுக்கு சம உரிமை, குழந்தை திருமணத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
உத்தரகண்ட் தலைநகர் டேராடூனில், முன்னாள் ராணுவத்தினர் பங்கேற்ற நிகழ்ச்சியில், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் பேசியதாவது:
உத்தரகண்டில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டதை பின்பற்றி, நாடு முழுதும் அந்த சட்டத்தை அமல்படுத்த வேண்டும். இன்றைய கால கட்டத்துக்கு அந்த சட்டம் மிகவும் அவசியம். மூன்று லட்சம் பேரின் கருத்துக்களை பரிசீலித்த பின்னரே, பொது சிவில் சட்டத்தை உத்தரகண்ட் அரசு அமல்படுத்தியது. சமூகத்தை ஒருங்கிணைக்க இந்த சட்டம் மிகவும் அவசியம்.
நாடு சுதந்திரமாக இருந்தாலும், அந்த சுதந்திரத்தை பாதுகாக்க பாதுகாப்பு படைகள் எப்போதும் தேவை. எந்தவித வெளி உதவியும் இல்லாமல், சமுதாயத்தின் தன்னம்பிக்கையை மட்டுமே மூலதனமாக வைத்து, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு வளர்ந்துள்ளது. மக்கள் சேவையை மையமாக வைத்து நுாற்றாண்டை கடந்து வீறுநடை போடுகிறது. முன்னாள் ராணுவத்தினர் ஆர்.எஸ்.எஸ்., முகாம்களில் பங்கேற்று, தங்களால் இயன்ற சமூகப் பணிகளில் ஈடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
