கோவில் - மசூதி விவகாரத்தில் வரலாற்று உண்மை தெரிய வேண்டும் மோகன் பகவத் கருத்தில் வேறுபடுகிறது ஆர்.எஸ்.எஸ்.,
கோவில் - மசூதி விவகாரத்தில் வரலாற்று உண்மை தெரிய வேண்டும் மோகன் பகவத் கருத்தில் வேறுபடுகிறது ஆர்.எஸ்.எஸ்.,
ADDED : டிச 27, 2024 01:38 AM

புதுடில்லி 'கோவிலா - மசூதியா என்ற சர்ச்சையில் வரலாற்று உண்மை தெரிய வேண்டும். நாகரிக நீதி கிடைக்க வேண்டும்' என, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் வார இதழான, 'ஆர்கனைசர்' கூறியுள்ளது.
'இந்த விவகாரத்தை எழுப்ப வேண்டாம்' என, அதன் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ள நிலையில், அதற்கு முரணான கருத்தை இந்த இதழ் வலியுறுத்தியுள்ளது.
சர்ச்சை
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத், 'கோவிலா - மசூதியா என்பது தொடர்பான சர்ச்சைகள் அதிகரித்து வருகின்றன.
'நாம், நீண்ட காலமாக நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகிறோம். அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டதைத் தொடர்ந்து, பலர் தங்களை ஹிந்துக்களின் தலைவர்களாக காட்டிக் கொள்வதற்காக இதுபோன்ற வழக்குகளை தொடர்கின்றனர். அதை ஏற்க முடியாது' என, கூறியிருந்தார்.
இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின், 'ஆர்கனைசர்' வார இதழின் சமீபத்திய பதிப்பில், உ.பி.,யின் சம்பல் பகுதியில், ஸ்ரீ ஹரிஹர மந்திர் என்ற ஹிந்து கோவில் இடிக்கப்பட்டு, ஜமா மஸ்ஜித் என்ற மசூதி கட்டப்பட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து விரிவாக எழுதப்பட்டுள்ளது.
மேலும், மோகன் பகவத் கருத்து குறித்து எதையும் குறிப்பிடாமல், கோவில் - மசூதி சர்ச்சை தொடர்பான கட்டுரையும் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:
சோம்நாத்தில் துவங்கி சம்பல் வரையும், அதற்கு அப்பாலும் உள்ள கோவில் - மசூதி சர்ச்சையில் வரலாற்று உண்மை தெரிய வேண்டும். இந்த விஷயத்தில் நாகரிகமான முறையில் நீதி கிடைக்க வேண்டும்.
சம்பல் விவகாரத்தைத் தொடர்ந்து, தனிநபர்கள் மற்றும் சமூகங்களுக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகள் தொடர்பான விவாதம் துவங்கியுள்ளது.
இந்த விவகாரங்களை, ஹிந்து - முஸ்லிம் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது. நம் நாட்டின் வரலாறு, இதிகாசங்கள், சமூகத்தில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் ஆகியவற்றையும் கவனிக்க வேண்டும்.
போராட்டம்
சோம்நாத் முதல் சம்பல் வரை மற்றும் அதற்கு அப்பாலும் நடக்கும் போராட்டங்கள், ஹிந்து மதத்தின் ஆதிக்கத்தை காட்டுவதற்காக நடக்கவில்லை.
வரலாற்று உண்மைகள் தெரிய வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். நம் நாட்டின் அடையாளத்தை மீட்கவும், நாகரிகமான முறையில் நீதி கிடைக்கவும், இந்த போராட்டங்கள் நடக்கின்றன.
இந்த சட்டப் போராட்டங்கள், இந்திய முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல. இதை ஹிந்துக்களும், இந்திய முஸ்லிம்களும் புரிந்து கொள்ள வேண்டும்.
முகலாயர்கள் காலத்தில் நடந்த அட்டூழியங்களால், படையெடுப்புகளால், நம் நாட்டின் அடையாளம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு முன் வரை ஹிந்துக்களாக இருந்தவர்களே, தற்போதைய இந்திய முஸ்லிம்கள்.
அதனால், முகலாயர்களின் படையெடுப்புகளால் நாம் அனைவரும் நம் நாட்டின் அடையாளத்தை இழந்துள்ளோம். நாடு பிரிவினையை சந்தித்தபோது, நம் நாடு, மதத்தின் அடிப்படையால் பிரிக்கப்பட்டது.
இது அப்போது நடந்த பெரிய தவறாகும். முகலாயர்களின் கொடூரங்களை மறைத்து, அவர்களை பாராட்டும் வகையில், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகள் சித்தரித்தன. நாட்டின் வரலாறும் திருத்தப்பட்டு, திணிக்கப்பட்டது.
அதனால், கோவிலா - மசூதியா என்பது முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல. நம் நாட்டின் அடையாளத்துடன், பாரம்பரியத்துடன் தொடர்புடையது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

