விஜயேந்திராவுக்கு ஆர்.எஸ்.எஸ்., 'அட்வைஸ்'; பா.ஜ., பூசலை தீர்க்க களம் இறங்கியது
விஜயேந்திராவுக்கு ஆர்.எஸ்.எஸ்., 'அட்வைஸ்'; பா.ஜ., பூசலை தீர்க்க களம் இறங்கியது
ADDED : ஜன 30, 2025 11:45 PM

பெங்களூரு ; கர்நாடகாவில் பா.ஜ.,வில் ஏற்பட்டுள்ள உட்கட்சி சண்டையை தீர்த்து வைக்க ஆர்.எஸ்.எஸ்., முன் வந்துள்ளது. பா.ஜ., தலைவர் விஜயேந்திராவை அழைத்து அட்வைஸ் கூறியுள்ளது.
கர்நாடக பா.ஜ., தலைவராக இருக்கும் விஜயேந்திராவுக்கு, கட்சிக்குள் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அவரை தலைவர் பதவியில் இருந்து மாற்ற வேண்டும் என்று, எம்.எல்.ஏ.,க்கள் பசனகவுடா பாட்டீல் எத்னால், ரமேஷ் ஜார்கிஹோளி தலைமையில் ஒரு குழு செயல்பட்டு வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் ஸ்ரீராமுலுவும், விஜயேந்திராவுக்கு எதிராக பேசினார். தனக்கு தலைவர் பதவி வேண்டும் என்றும் கேட்டார். இந்நிலையில் விஜயேந்திராவுக்கு எதிராக பேசுவோர் பட்டியலில், சிக்கபல்லாபூர் பா.ஜ., - எம்.பி., சுதாகரும் இணைந்து உள்ளார். இதனால் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டு உள்ளது.
அறிவுரை
இதனால் இப்பிரச்னையில் தற்போது ஆர்.எஸ்.எஸ்., தலையிட்டு உள்ளது. பெங்களூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ்., அலுவலகத்தில் நேற்று நடந்த கூட்டத்திற்கு விஜயேந்திரா வரவழைக்கப்பட்டார்.
காங்கிரசில் உட்கட்சி பிரச்னை இருந்தாலும் வெளியே தெரிவது இல்லை. ஆனால் நமது கட்சி பிரச்னை ஏன் வெளியில் தெரிகிறது. நீங்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து செல்லவில்லை என்றும், உங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் பதவி கொடுப்பதாக குற்றச்சாட்டு எழுகிறது.
அனைவரையும் ஒருங்கிணைத்து செல்லுங்கள். ஒற்றுமையாக இல்லாவிட்டால் கட்சிக்கு தான் பிரச்னை ஏற்படும் என்று, அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து, விஜயேந்திரா அளித்த பேட்டி:
பா.ஜ.,வில் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு, தேர்தல் எப்படி நடக்கும் என்று சுதாகர் உள்ளிட்ட சிலருக்கு சொல்லி கொள்ள நினைக்கிறேன். மாநில தலைவராக இருந்தாலும், மாவட்ட பா.ஜ., தலைவர் நியமனத்தில் எனது தலையீடு இருப்பது இல்லை.
தலைவர்களை தேர்வு செய்யும் பொறுப்பு, கட்சியின் மூத்த தலைவர் கணேஷ் கார்னிக்கிற்கு கொடுக்கப்பட்டது. அவரது தலைமையின் கீழ் 13 பேர் வேலை செய்தனர். ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் மூன்று, நான்கு பெயர்கள் தலைவர் பதவிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
எனது மாவட்டமான ஷிவமொக்காவில் தலைவரை தேர்வு செய்வது பற்றி, நான் கருத்து சொல்ல முடியும். மற்ற மாவட்டங்களுக்கு என்னால் எதுவும் சொல்ல முடியாது. இந்த விஷயத்தில் சுதாகரை நான் குறை சொல்ல விரும்பவில்லை. அவர் குழப்பத்தில் இருக்கலாம். நாடு முழுதும் கட்சியின் அமைப்பு தேர்தல் ஒரே மாதிரி நடக்கிறது.
தயவு செய்து என்னை பற்றி பொய்யான குற்றச்சாட்டை சுதாகர் வெளியிட வேண்டாம். இது அவருக்கு மரியாதையை அளிக்காது. சிக்கபல்லாபூர் பா.ஜ., புதிய தலைவர் சந்தீப் ரெட்டி சுதாகரின் உறவினர். எனது நடத்தையால் நிறைய பேருக்கு மனவருத்தம் ஏற்பட்டு உள்ளதாக அவர் கூறுகிறார்.
எனது செயல்பாட்டை மாற்றி கொள்ள நான் தயார். முதல்வராக வேண்டும் என்ற ஆசையில் நான் இல்லை.
கட்சியை கட்டமைக்க தலைவராக இருந்து இரவு, பகல் உழைக்கிறேன். என் மீது பழி சுமத்த வேண்டாம். ஸ்ரீராமுலு மூத்த தலைவர். அமைச்சராக பணியாற்றியவர். கட்சிக்காக உழைத்து உள்ளார்.
ஒருங்கிணைப்பு கமிட்டியில் நடந்த பிரச்னைக்கு பிறகு ஊடகங்களிடம் எதுவும் கூற வேண்டாம் என்று கேட்டு கொண்டேன். எதுவாக இருந்தாலும் நான்கு சுவருக்குள் அமர்ந்து விவாதிக்க வேண்டும். சுதாகரிடம் பேச்சு நடத்த தயாராக உள்ளேன்.
யுத்தம் ஏன்?
எடியூரப்பாவின் மகன் என்பதால் என்னை கட்சியில் சிலர் குறி வைக்கின்றனர் என்று சொல்ல மாட்டேன். அவரது மகனாக இருப்பது எனது பெருமை. அவருடைய வீழ்ச்சி, எழுச்சியை கண்டு உள்ளேன். சுதாகரிடம் இருந்து எனது மொபைல் போனுக்கு எப்போதும் அழைப்பு வந்தது இல்லை. எதற்காக என்னிடம் யுத்தம் செய்ய போகிறார் என்று தெரியவில்லை.
மகாகும்பமேளாவை விமர்சிக்கும் காங்கிரஸ்காரர்கள் அயோக்கியர்கள். ஹிந்துக்கள் உணர்வுகளை புண்படுத்துவது அவர்கள் நோக்கம். பிரதமர் மோடியை விமர்சித்து பேசும் தகுதி, அமைச்சர் சந்தோஷ் லாட்டிற்கு கிடையாது. அவர் விமர்சித்து பேசுவதால் பிரதமரின் கண்ணியம் பாதிக்கப்படாது.
இவ்வாறு கூறினார்.