ADDED : நவ 16, 2025 11:48 PM
பெரோஸ்பூர்: பஞ்சாபில் ஆர்.எஸ்.எஸ்., நகரத் தலைவரின் பேரன் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மர்ம நபர்கள் பஞ்சாபின் பெரோஸ்பூரைச் சேர்ந்தவர் தினா நாத். ஆர்.எஸ்.எஸ்., எனப்படும் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் அப்பகுதியின் தலைவராக இருந்துள்ளார். இவரது மகன் பல்தேவ். இவரும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் உள்ளார். இவரது மகன் நவீன் அரோரா. 40, அங்கு கடை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் மாலை கடையில் இருந்து வீடு திரும்பிய அரோரா, புத்வாரா வாலா மொகலா பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவர், திடீரென துப்பாக்கியால் அரோராவை சுட்டனர்.
இதில், பலத்த காயம் அடைந்து கீழே விழுந்த அவரை, அப்பகுதியினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே அரோரா இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
தகவல் அறிந்த மற்ற கடைக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விசாரணை துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
சம்பவம் நடந்த பகுதி யில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தபோது, பைக்கில் வந்த மர்மநபர்கள் இருவர் கொலை செய்து தப்பி ஓடுவது தெரிந்தது.
வீடியோ பதிவுகள் அடிப்படையில், கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், அரோரா கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு பா.ஜ., - எம்.பி., ரவ்னீத் சிங் பிட்டு கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
மேலும், குற்றவாளிகளை விரைந்து பிடிக்க வேண்டும் என, ஆளும் ஆம் ஆத்மி அரசை வலியுறுத்தியுள்ளார்.

