ஆக்கிரமிப்பு தகவல்களை வெளியிட மாநகராட்சிக்கு ஆர்.டி.ஐ., உத்தரவு
ஆக்கிரமிப்பு தகவல்களை வெளியிட மாநகராட்சிக்கு ஆர்.டி.ஐ., உத்தரவு
ADDED : பிப் 18, 2026 03:15 AM

புதுடில்லி: சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் தொடர்பான தகவல்களை முன்கூட்டியே வெளியிட டில்லி மாநகராட்சிக்கு, ஆர்.டி.ஐ., மத்திய தகவல் ஆணையம் உத்தர விட்டுள்ளது.
மத்திய தகவல் ஆணைய கமிஷனர் வினோத் குமார் திவாரி, டில்லி மாநகராட்சிக்கு பிறப்பித்துள்ள உத்தரவு:
டில்லி மாநகரில் ஆக்கிரமிப்பு தொடர்பான தகவல்கள் பொதுமக்கள் அறியும் வகையில் பொதுவெளியில் தெரிவிக்கப்பட வேண்டும். மேலும், இதுகுறித்த தகவல் கேட்போருக்கு உடனடியாக பதில் அளிக்க வேண்டும்.
விண்ணப்பம்
இந்த தகவல்கள் பொது நலன் கொண்டவை. ஆக்கிரமிப்பு மற்றும் அவற்றை அகற்றுதல் குறித்த தகவல் கேட்டு, தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி ஏராளமான விண்ணப்பங்கள் வருகின்றன.
டில்லி பஹர்கஞ்ச் மெயின் பஜாரில் ஆக்கிரமிப்புகள் குறித்த மேல்முறையீட்டு மனுவை வழக்கை விசாரித்த பின் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
மேல்முறையீடு செய்தவர் தன் புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பதில் கேட்டுள்ளார். இதுபோன்ற விவகாரங்களில் வெளிப்படைத்தன்மை அவசியம்.
பெறப்பட்ட புகார்கள், அவற்றின் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்த தகவல்களை மக்கள் கேள்வி கேட்பதற்கு முன்பே, பொதுவெளியில் முன்கூட்டியே வெளியிட வேண்டும். இது, மாநகராட்சியின் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும்.
மேலும், தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி விண்ணப்பம் தாக்கல் செய்வதும் குறையும்.
கடந்த, 2024ம் ஆண்டு மே மாதம் தாக்கல் செய்யப்பட்ட ஒரு விண்ணப்பத்துக்கு உரிய காலத்துக்குள் பதில் அனுப்பவில்லை.
மேல்முறையீட்டு அதிகாரியின் உத்தரவும் நிறைவேற்றப்படவில்லை. இதுபோன்ற குறைபாடுகள், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை தோற்கடித்து விடுகிறது.
கவனம்
டில்லி மாநகராட்சியின் கரோல் பாக் மண்டல உதவி ஆணையர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வரும் விண்ணப்பங்களை கவனமாக கையாள வேண்டும்.
உரிய காலத்துக்குள் பதில் அனுப்ப வேண்டும். மெத்தனப்போக்கு தொடர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்.
டில்லி மாநகர் முழுதும் சட்டவிரோத ஆக்கிரமிப்பு, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவற்றை நான்கு வாரங்களுக்குள் முன்கூட்டியே வெளியிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

