பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு முழு ஆதரவு: மோடியிடம் ரஷ்ய அதிபர் புடின் உறுதி
பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு முழு ஆதரவு: மோடியிடம் ரஷ்ய அதிபர் புடின் உறுதி
UPDATED : மே 05, 2025 04:38 PM
ADDED : மே 05, 2025 04:28 PM

புதுடில்லி: பிரதமர் மோடியுடனான தொலைபேசி உரையாடலில் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு முழு ஆதரவு அளிப்பதாக ரஷ்ய அதிபர் புடின் உறுதியளித்தார்.
காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் குறித்து பிரதமர் மோடி இடம் ரஷ்ய அதிபர் புடின் தொலைபேசியில் பேசியுள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு முழு ஆதரவை வழங்குவதாக புடின் உறுதியளித்தார்.
இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
ரஷ்ய அதிபர் புடின் பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை கடுமையாக கண்டித்தார். அப்பாவி மக்கள் உயிரிழந்ததற்கு அவர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு முழு ஆதரவையும் தெரிவித்தார்.
கொடூரமான தாக்குதலுக்கு காரணமானவர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இரு நாட்டு தலைவர்களும் உறவுகளை மேலும் ஆழப்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர். வெற்றி தினத்தின் 80வது ஆண்டு விழாவைக் கொண்டாட இருக்கும் அதிபர் புடினுக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
மேலும் இந்த ஆண்டின் இறுதியில் இந்தியாவில் நடைபெறும் வருடாந்திர உச்சிமாநாட்டிற்கு அவரை அழைத்தார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.