சபரிமலை போராட்ட பூமி அல்ல கேரள உயர்நீதிமன்றம் குட்டு
சபரிமலை போராட்ட பூமி அல்ல கேரள உயர்நீதிமன்றம் குட்டு
ADDED : டிச 05, 2024 12:17 AM
சபரிமலை : ' சபரிமலை போராடுவதற்கான இடம் அல்ல. இங்கு எவரும் போராட்டம் நடத்த முடியாது 'என்று கேரள உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
டோலியில் பயணம் செய்யும் பக்தர்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க திருவிதாங்கூர் தேவசம்போர்டு ப்ரீபெய்டுடோலி சிஸ்டத்தை கொண்டு வருவதற்கு முயற்சி மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக சபரிமலையில் நிர்வாக அதிகாரி முராரி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது .
இதில் ஒரு பக்தரை பம்பையில் இருந்து சன்னிதானம் அழைத்து வர 3500 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இதை டோலி தொழிலாளர்கள் ஏற்கவில்லை.
கட்டணம் அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதை தேவசம்போர்டு ஏற்காத நிலையில் திடீரென்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இது தொடர்பாக கேரள உயர்நீதிமன்றம் நியமித்துள்ள ஸ்பெஷல் கமிஷனர் ஜெயகிருஷ்ணன் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார்.
இதன் மீது நேற்று விசாரணை நடத்திய நீதிபதிகள் அனில் கே நரேந்திரன், எஸ் முரளி கிருஷ்ணா ஆகியோர் கூறியதாவது:
சபரிமலையில் யாரும் போராட்டம் நடத்த முடியாது. அது போராட்டம் நடத்தக்கூடிய இடமும் அல்ல. சபரிமலையில் அனைவருக்கும் அசவுகரியங்கள் உள்ளது. வேலை நிறுத்தம் போன்றவை மேற்கொண்டு நடக்காது என்பதை தேவசம்போர்டு உறுதி செய்ய வேண்டும். டோலியில் பம்பையில் இருந்து சன்னிதானம் அழைத்து வர 3500 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கு கூடுதலாக வசூலிக்க முடியாது. மலையேற சிரமம் உள்ளவர்களை சன்னிதானம் கொண்டு வர 380 டோலிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேவசம்போர்டு வழக்கறிஞர் கூறினார். வயது மூத்தவர்களும், உடல் ரீதியாக பிரச்னை உள்ளவர்களும் தான் டோலி சேவையை நாடுகின்றனர் என்பதை நினைவில்
கொள்ளுமாறு நீதிபதிகள் கூறினர்.
மேலும் கொல்லம் ஆரியங்காவில் சபரிமலை பக்தர்கள் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது பற்றி அறிக்கை தாக்கல் செய்யும்படியும் உத்தரவிட்டனர்.