எலான் மஸ்க்கிற்கு ஒரு டிரில்லியன் டாலர் சம்பளம்; டெஸ்லா வருடாந்திர கூட்டத்தில் ஒப்புதல்
எலான் மஸ்க்கிற்கு ஒரு டிரில்லியன் டாலர் சம்பளம்; டெஸ்லா வருடாந்திர கூட்டத்தில் ஒப்புதல்
UPDATED : நவ 07, 2025 09:38 AM
ADDED : நவ 07, 2025 08:55 AM

வாஷிங்டன்: எலான் மஸ்க்கிற்கு ஒரு டிரில்லியன் டாலர் சம்பளம் வழங்க டெஸ்லாவின் வருடாந்திரக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
உலகின் நம்பர் ஒன் பணக்காரரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், தனக்கு ஒரு டிரில்லியன் டாலர் சம்பளம் வேண்டும் என்று, டெஸ்லா பங்குதாரர்களிடம் கோரிக்கை விடுத்தார். சம்பள உயர்வு வழங்கப்படாவிட்டால், டெஸ்லாவில் இருந்து விலகுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த சூழலில், எலான் மஸ்க்கின் சம்பள விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்த ஆஸ்டின் நகரத்திலுள்ள டெஸ்லா தொழிற்சாலையில் வருடாந்திரக் கூட்டம் நடந்தது. அப்போது, டெஸ்லா நிறுவனத்தில் எலான் மஸ்க்கை வைத்திருப்பது நிறுவனத்தின் எதிர்காலத்திற்கு நல்லது என்றும், வர் வெளியேறினால் நிறுவனத்தின் பங்கு விலை வீழ்ச்சி அடையக்கூடும் என்று டெஸ்லாவின் தலைவர் ராபின் டென்ஹோம் தெரிவித்தார். எனவே, எலான் மஸ்க்கின் சம்பள விவகாரத்திற்கு ஆதரவு அளிக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.
இந்தக் கூட்டத்தில், அனைவரையும் வியக்கத்தக்க வகையில், எலான் மஸ்க்கிற்கு ஒரு டிரில்லியன் டாலர் சம்பளம் வழங்க அந்நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்தனர். மொத்தம் உள்ள பங்குதாரர்களில் 75 சதவீதத்திற்கும் அதிகமானோர் இந்த முடிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளனர். இதன்மூலம், எலான் மஸ்க் டெஸ்லா நிறுவனத்தில் மேலும் 7 ஆண்டுகள் சேவையை தொடர்வது உறுதியாகியுள்ளது.
ஏஐ மற்றும் ரோபாட்டிக்ஸ் துறைகளில் கடும் போட்டியான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், மஸ்க்கின் சேவையை டெஸ்லாவில் தொடர்வதை உறுதி செய்யும் விதமாக, இந்த சம்பள உயர்வு திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக டெஸ்லா அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சம்பள உயர்வு குறித்த கோரிக்கைக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக எலான் மஸ்க் கூறினார்.
மஸ்க் சம்பளம் ஆனது, பணமாக வழங்கப்படாது. அடுத்த பத்து ஆண்டுகளுக்கு நிறுவனத்தின் பங்குகளாக வழங்கப்படும். நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு 1.5 டிரில்லியன் டாலர்கள் என்ற அளவில் உள்ளது. அதை 8.5 டிரில்லியன் டாலர்கள் ஆக உயர்த்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் இந்த சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அரசியல் கருத்துக்களால் டெஸ்லாவின் பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையில், இதற்காக, எலான் மஸ்க் ஒரு டிரில்லியன் டாலர்களைப் பெற்றுக்கொண்டதாக 'டெஸ்லா டேக்டவுன்' என்ற சமூக ஆர்வலர் குழு விமர்சித்துள்ளது.
* ஒரு டிரில்லியன் என்பது ஒரு லட்சம் கோடி.
* ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் என்பது இந்திய மதிப்பில் 88 லட்சம் கோடி ரூபாய்.

