UPDATED : ஏப் 07, 2025 07:06 AM
ADDED : ஏப் 06, 2025 11:03 PM

புதுடில்லி: காங்கிரஸ் கட்சிக்குள் தலைமுறை மாற்றம் நடந்து வருவதாக, கட்சியின் பொதுச்செயலர் சச்சின் பைலட் தெரிவித்தார்.
காங்கிரஸ் தொடர்ந்து மூன்று லோக்சபா தேர்தல்களில் தோல்வியடைந்து, 10 ஆண்டுகளுக்கும் மேல் மத்தியில் ஆட்சி அதிகாரத்தை பறிகொடுத்து நிற்கிறது. இதனால், கட்சியை வலுப்படுத்தும் முயற்சியில் காங்., மேலிடம் ஈடுபட்டுள்ளது.
கடந்த வாரம் டில்லியில், கட்சியின் மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடந்தது. அதைத் தொடர்ந்து, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டம், குஜராத்தின் ஆமதாபாதில் நாளை மறுநாள் நடைபெறுகிறது.
இதில், காங்., நிர்வாகிகள் 1,700 பேர் பங்கேற்கின்றனர்.
இது குறித்து கட்சியின் பொதுச்செயலர் சச்சின் பைலட் நேற்று கூறியதாவது:
கடந்த லோக்சபா தேர்தலிலும், அதற்கு பிறகு நடந்த சில மாநில சட்டசபை தேர்தல்களிலும் ஏற்பட்ட தோல்விகள், காங்.,கின் உறுதியையோ, போராடுவதற்கான வீரியத்தையோ குறைக்கவில்லை.
கட்சிக்குள் தலைமுறை மாற்றம் என்பதை ஓர் இரவுக்குள் நிகழ்த்த முடியாது. எனினும், கட்சியில் தலைமுறை மாற்றம் நடந்து வருகிறது. உணர்வுப்பூர்வமான பிரச்னைகளை பா.ஜ., எழுப்பும் சூழலில், ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக பார்லிமென்டில் காங்., செயல்படுகிறது.
இளைஞர்கள், பெண்கள், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர் ஆகியோரால் கட்சி வலுப்படுத்தப்படும்.
கட்சி நலனை கருதி மகளிர் அணி, தொழிலாளர் அணி, இளைஞர் அணி, தொண்டர் அணி போன்றவற்றை வலுப்படுத்த ராகுல், பிரியங்கா, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
குஜராத் மீது கூடுதல் கவனத்தை செலுத்த ராகுல் முடிவு செய்துள்ளார். அங்கு கட்சி வலுவாக இருக்கிறது. அதனால் தான், நீண்ட காலத்துக்கு பின், கட்சியின் அகில இந்திய கூட்டம் அங்கு நடைபெறுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.