ADDED : டிச 20, 2024 11:09 PM
உத்தரகன்னடா:கோலார், முல்பாகலின் கொத்துார் கிராமத்தில் மொரார்ஜி தேசாய் உறைவிட பள்ளி மாணவ - மாணவியர் சமீபத்தில் கல்வி சுற்றுலாவுக்காக உத்தரகன்னடா, பட்கலின் பிரசித்தி பெற்ற முருடேஸ்வரா கடற்கரைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கடலில் இறங்கி விளையாடும்போது, நான்கு மாணவியர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்துக்கு பின், முருடேஸ்வரா கடற்கரைக்குச் செல்ல சுற்றுலா பயணியருக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணியர், கோகர்ணா உட்பட உத்தரகன்னடாவின் பிற கடற்கரைகளுக்குச் செல்கின்றனர். 'கடலில் இறங்க வேண்டாம்' என, அங்குள்ள லைப் கார்டுகள் எச்சரித்தாலும், சுற்றுலா பயணியர் பொருட்படுத்துவது இல்லை.
கடலில் இறங்கி விளையாடுகின்றனர்; அபாயத்தில் சிக்குகின்றனர். கடலில் மூழ்கிய ஐந்து சுற்றுலா பயணியர், கடந்த நான்கு நாட்களில் லைப் கார்டுகளால் மீட்கப்பட்டனர்.
புத்தாண்டு காலகட்டத்தில், கடற்கரைகளில் போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும். சுற்றுலா பயணியரை கட்டுப்படுத்த முடியவில்லை. தங்களின் எச்சரிக்கையை மீறி, நீரில் இறங்கி அபாயத்தில் சிக்குகின்றனர். எனவே, போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்கும்படி, உள்ளூர் மக்கள் வலியுறுத்துகின்றனர்.