செங்கோலுக்கு எதிர்ப்பு தெரிவித்த சமாஜ்வாதி எம்.பி.,: தமிழில் கண்டனம் தெரிவித்த உ.பி., முதல்வர்
செங்கோலுக்கு எதிர்ப்பு தெரிவித்த சமாஜ்வாதி எம்.பி.,: தமிழில் கண்டனம் தெரிவித்த உ.பி., முதல்வர்
ADDED : ஜூன் 27, 2024 03:21 PM

புதுடில்லி: லோக்சபாவில் வைக்கப்பட்டுள்ள செங்கோலை அகற்ற வேண்டும் எனத் தெரிவித்த சமாஜ்வாதி கட்சி எம்.பி.,க்கும், இண்டியா கூட்டணிக்கும், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தமிழில் பதிவிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.
லோக்சபாவில் தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட செங்கோல் சபாநாயகர் இருக்கை அருகே வைக்கப்பட்டுள்ளது. இதற்கு இண்டியா கூட்டணியை சேர்ந்த சமாஜ்வாதி கட்சி எம்.பி., ஆர்.கே.சவுத்ரி, ''லோக்சபாவில் செங்கோலை அகற்ற வேண்டும். அதற்கு பதிலாக அந்த இடத்தில் இந்திய அரசியல் சாசனத்தை வைக்க வேண்டும்'' என சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதினார்.
அவரது கருத்துக்கு காங்கிரசும் ஆதரவளித்தது. ஆனால் அவரது கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்தார். செங்கோலை அகற்ற வேண்டும் எனக் கூறியதற்கு உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தனது 'எக்ஸ்' தளத்தில் அவர் தமிழில் பதிவிட்டதாவது: இந்திய நாட்டின் வரலாறு மற்றும் கலாசாரத்தை சமாஜ்வாதி கட்சி எப்போதுமே மதித்ததில்லை. 'செங்கோல்' பற்றிய அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் தெரிவித்துள்ள கருத்துகள் கண்டனத்துக்குரியது மட்டுமின்றி, அவர்களின் அறியாமையையும் காட்டுகிறது.
குறிப்பாக தமிழ் கலாசாரத்துக்கு எதிரான இண்டியா கூட்டணிக் கட்சிகளின் அறியாமையை காட்டுகிறது. 'செங்கோல்' இந்தியாவின் பெருமையான அடையாளங்களுள் ஒன்று. பிரதமர் மோடி, பார்லி.,யில் செங்கோலுக்கு உயரிய மரியாதையை அளித்து இந்தியர்கள் அனைவருக்குமே பெருமை சேர்த்துள்ளார். இவ்வாறு யோகி ஆதித்யநாத் பதிவிட்டுள்ளார்.