ADDED : ஏப் 28, 2025 06:26 AM

அலிகார் : உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு பிரதான எதிர்க்கட்சியாக விளங்கும் சமாஜ்வாதியைச் சேர்ந்த ராம்ஜிலால் சுமன், ராஜ்யசபா எம்.பி.,யாக உள்ளார்.
மார்ச்சில் பார்லி., பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, ராஜ்யசபாவில் பேசிய எம்.பி., ராம்ஜிலால் சுமன், முகலாயர்களுக்கு எதிராக போராடிய மேவார் பகுதியை ஆண்ட மன்னர் ராணா சங்கா குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்தார்.
இதற்கு கர்னி சேனா உள்ளிட்ட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ராம்ஜிலால் சுமனுக்கு எதிராக போராட்டம் நடத்திய அவர்கள், சமீபத்தில் ஆக்ராவில் உள்ள அவரது வீட்டை சூறையாடினர்.
புலந்த்ஷாஹர் மாவட்டத் தில் சமீபத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க ராம்ஜிலால் சுமன் நேற்று காரில் சென்றார்.
அலிகார் மாவட்டத்தின் கெரேஷ்வர் சவுராஹா என்ற பகுதி அருகே வந்த போது, கர்னி சேனா அமைப்பினர், ராம்ஜிலால் சுமனின் கார் மீதும், அவரது பாதுகாப்பு வாகனங்கள் மீதும், ஏராளமான டயர்களை வீசி தாக்கினர்.
இதனால் வாகனங்கள் நிலைதடுமாறின. எனினும் விபத்து நடக்கவில்லை. இச்சம்பவத்தை தொடர்ந்து, ராம்ஜிலால் சுமனை ஆக்ராவுக்கு அழைத்துச் சென்று, ஹாத்ராஸ் எல்லையில் போலீசார் விட்டுச் சென்றனர்.

