சந்தேஷ்காலி குற்றவாளி ஷாஜஹான் சி.பி.ஐ., வசம்... ஒப்படைப்பு!
சந்தேஷ்காலி குற்றவாளி ஷாஜஹான் சி.பி.ஐ., வசம்... ஒப்படைப்பு!
ADDED : மார் 07, 2024 02:02 AM

கோல்கட்டா, சந்தேஷ்காலியில் அமலாக்கத் துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட திரிணமுல் காங்கிரஸ் பிரமுகர் ஷாஜஹான் ஷேக்கை, சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்க கோல்கட்டா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும், குறிப்பிட்ட நேரத்தில் ஒப்படைக்காமல், மேற்கு வங்க அரசு இழுத்தடிப்பு செய்தது. இறுதியில் கண்ணாமூச்சி ஆட்டம் முடிவுக்கு வந்தது.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ளது சந்தேஷ்காலி.
ரேஷன் வினியோக மோசடி வழக்கு தொடர்பாக இந்தப் பகுதியின் திரிணமுல் காங்., பிரமுகர் ஷாஜஹான் ஷேக்கிடம் விசாரிக்க, கடந்த, ஜன., 5ல் அமலாக்கத் துறை அதிகாரிகள் சென்றனர்.
ஆனால், ஷேக்கின் ஆதரவாளர்கள், அமலாக்கத் துறை அதிகாரிகளை தாக்கினர்.
மக்கள் போராட்டம்
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர் தலைமறைவானார். இதைத் தொடர்ந்து, அவர் மீது பல்வேறு புகார்கள் வெளிவரத் துவங்கின.
சந்தேஷ்காலியில், பழங்குடியின மக்களை மிரட்டி, நிலங்களை ஷாஜஹான் ஷேக், தன் ஆதரவாளர்கள் உதவியுடன் பறித்துள்ளார். மேலும், பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அவருக்கு எதிராக, மக்கள் போராட்டத்தில் ஈடுபடத் துவங்கினர்.
நீண்ட இழுபறிக்குப் பின், நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, கடந்த பிப்., 29ல் அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து கட்சி அவரை சஸ்பெண்ட் செய்தது. இது தொடர்பாக, மேற்கு வங்க போலீசின் சி.ஐ.டி., எனப்படும் குற்றவியல் விசாரணைப் பிரிவு வழக்குப் பதிவு செய்து, அவரை காவலில் எடுத்தது.
அமலாக்கத்துறை அதிகாரிகள் மீதான தாக்குதல் தொடர்பான வழக்கில் அவரிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி, சி.பி.ஐ., சார்பில், கோல்கட்டா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதன்படி, ஷாஜஹான் ஷேக்கை, சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்க, கோல்கட்டா உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது. ஆனால், மாநில அரசு, உச்ச நீதிமன்றம் சென்றது. இதை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்தது.
இதையடுத்து, நீதிமன்ற உத்தரவை மீறியதாக, கோல்கட்டா உயர் நீதிமன்றத்தில், அமலாக்கத் துறை சார்பில் நேற்று மீண்டும் முறையிடப்பட்டது.
உச்ச நீதிமன்றம் எந்த இடைக்கால தடையும் விதிக்காததால், ஷாஜஹான் ஷேக்கை மாலை 4:00 மணிக்குள், சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பரிசோதனை
இதன்படி, சி.பி.ஐ., அதிகாரிகள், சி.ஐ.டி., தலைமையகத்துக்கு சென்றனர். ஆனால், உடனே ஒப்படைக்காமல் தாமதம் செய்யப்பட்டது. இறுதியில், 6:48 மணிக்கு அவரை ஒப்படைத்தனர்.
இதைத் தொடர்ந்து, உள்ளூர் மருத்துவமனையில் அவருக்கு, சி.ஐ.டி., போலீஸ் தரப்பில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
அவரை அழைத்துச் சென்ற சி.பி.ஐ., அதிகாரிகள், மற்றொரு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை செய்தனர். அதன்பின், கோல்கட்டாவில் உள்ள சி.பி.ஐ., அலுவலகத்துக்கு அவர் அழைத்து செல்லப்பட்டார்.

