மதமாற்றத்திற்காக ரூ.500 கோடி; முஸ்லிம் நாடுகளிடம் இருந்து வாங்கிய சங்கூர் பாபா
மதமாற்றத்திற்காக ரூ.500 கோடி; முஸ்லிம் நாடுகளிடம் இருந்து வாங்கிய சங்கூர் பாபா
ADDED : ஜூலை 11, 2025 12:28 PM

லக்னோ: உத்தரபிரதேசத்தில் மதமாற்ற கும்பலின் மூளையாக செயல்பட்ட சங்கூர் பாபா, முஸ்லிம் நாடுகளிடம் இருந்து ரூ.500 கோடி பெற்றிருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சட்டவிரோத மதமாற்றத்தில் ஈடுபட்டதாக மாதம்பூர் பகுதியை சேர்ந்த சங்கூர்பாபா என்ற ஜலாலுதீன் என்பவரையும், அவரது கூட்டாளியான நீத்து என்ற நஸ்ரின் என்பவரையும் பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நாச வேலைகளில் அவர்கள் ஈடுபட இருந்தது முதற்கட்ட விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
குறிப்பாக, ஏழைகள், ஆதரவற்ற தொழிலாளர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், கணவரை இழந்த பெண்கள் ஆகியோருக்கு நிதியுதவி அளிப்பதாக கூறியும், திருமண வாக்குறுதி அளித்தும், மிரட்டல் விடுத்தும், மதமாற்ற நடவடிக்கையில் இருவரும் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆரம்பத்தில் தர்கா முன்பு வளையல் மற்றும் தாயத்து விற்று வந்த சங்கூர் பாபா, மதமாற்ற செயல்களுக்காக ரூ.500 கோடி வரை வெளிநாடுகளில் பணத்தை பெற்று வந்தது தெரிய வந்துள்ளதாக பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த ரூ.500 கோடியில் ரூ.200 கோடி அதிகாரப்பூர்வமாக பெறப்பட்டுள்ளது. எஞ்சிய ரூ.300 கோடியை நேபாளம் வழியாக சட்டவிரோத ஹவாலா கும்பலின் மூலம் பெற்றுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதற்காக, நேபாளத்தில் உள்ள காத்மண்ட், நவல்பரசி, ருபன்தேஹி மற்றும் பான்கே மாவட்டங்களில் 100க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் திறக்கப்பட்டு, அதன்மூலம் சங்கூர் பாபாவுக்கு அனுப்ப்பட்டுள்ளது. பாகிஸ்தான், துபாய், சவுதி அரேபியா மற்றும் துருக்கி போன்ற முஸ்லிம் நாடுகளில் இருந்த அந்த வங்கிக் கணக்குகளுக்கு பணம் அனுப்பப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தின் பல்ராம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சாங்கூர் பாபாவுக்கு, நேபாளத்தில் உள்ள ஏஜென்ட்டுகள் 4 முதல் 5 சதவீத கமிஷனை பெற்றுக் கொண்டு, பணத்தை அனுப்பி வைத்துள்ளனர். சில சமயங்களில் சி.டி.எம்., (CDM) இயந்திரத்தின் மூலம் சாங்கூர் பாபாவின் வங்கிக் கணக்கிற்கு பணத்தை டெபாசிட் செய்துள்ளனர்.
நேபாள கரன்சியை பல்ராம்பூர், ஸ்ரவஸ்தி,பஹ்ரைச், லக்கிம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பணி பரிமாற்ற மையத்தின் மூலம் இந்திய ரூபாயாக பெற்று வந்துள்ளார்.
இதனிடையே, கடந்த 10 ஆண்டுகளாக வருமான வரி தாக்கல் செய்த விபரங்களை பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கேட்டுள்ளனர்.