செயற்கைக்கோள்கள் ஒருங்கிணைப்பு: இன்னும் 3 மீட்டர் இடைவெளி தான்
செயற்கைக்கோள்கள் ஒருங்கிணைப்பு: இன்னும் 3 மீட்டர் இடைவெளி தான்
ADDED : ஜன 12, 2025 11:40 PM

பெங்களூரு: விண்வெளியில் இரண்டு செயற்கைக்கோள்களை ஒன்றிணைக்கும் முயற்சியில், இஸ்ரோ புதிய வெற்றியைப் பெற்றுள்ளது. இரண்டு செயற்கைக்கோள்களும், 3 மீட்டர் அதாவது 9 அடி இடைவெளி வரை நெருங்கிவிட்டன.
அடுத்ததாக ஒன்றுக்கொன்று கைக்குலுக்க தயாராக உள்ளன.
சுற்றுவட்டப் பாதை
'ஸ்பேடெக்ஸ்' எனப்படும் விண்வெளியில், இரண்டு செயற்கைக்கோள்களை ஒன்றிணைக்கும் தொழில்நுட்பத்தை அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகியவை மட்டுமே சாதித்துள்ளன. அதில் நான்காவது நாடாக இணையும் முயற்சியில், நம் நாடு ஈடுபட்டுள்ளது.
இந்த பரிசோதனைக்காக, இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையம் பி.எஸ்.எல்.வி., - சி 6-0 ராக்கெட்டை கடந்தாண்டு டிச., 30ல் ஏவியது.
இதில், வேறு சில செயற்கைக் கோள்களுடன், சேசர் மற்றும் டார்கெட் என்று இரண்டு செயற்கைக்கோள்களும் அனுப்பப்பட்டன.
தலா, 220 கிலோ எடையுள்ள இவை, பூமியில் இருந்து, 475 கி.மீ., உயரத்தில் சுற்றுவட்டப் பாதையில் நிறுத்தப்பட்டன.
இரண்டு செயற்கைக்கோள்களையும் ஒருங்கிணைக்க, கடந்த 7 மற்றும் 9ம் தேதிகளில் முயற்சிகள் நடந்தன.
சில தொழில்நுட்ப காரணங்களால் கடைசி நேரத்தில் அவை நிறுத்தப்பட்டன.
இந்நிலையில், வெவ்வேறு திசையில் பயணித்த அந்த செயற்கைக்கோள்களை மீண்டும் ஒருமுகப்படுத்தும் பணி நடந்தது.
இதன்படி, 15 மீட்டர் இடைவெளிக்குள் இரண்டு செயற்கைக்கோள்களும் எதிரெதிரே நிறுத்தப்பட்டன.
இதைத் தொடர்ந்து, 3 மீட்டர் இடைவெளி முயற்சி நேற்று நடந்தது. இந்த முயற்சி வெற்றிகரமாக நடந்ததாக இஸ்ரோ கூறியுள்ளது.
இந்த முயற்சியைத் தொடர்ந்து, இரண்டு செயற்கைக்கோள்களும் மீண்டும் தங்களுடைய இடங்களை சென்றடைந்தன.
சோதனை
அடுத்ததாக, விண்வெளியில் இந்த இரண்டு செயற்கைக்கோள்களையும் இணைப்பதற்கான முயற்சிகள் நடக்க உள்ளன. அதற்கு முன், தற்போதைய சோதனையின் முடிவுகள் ஆராயப்பட உள்ளதாக இஸ்ரோ கூறியுள்ளது.
விண்வெளியில் நம் நாட்டுக்கென தனியாக, 'பாரதிய அந்தரிக் ஷ்' என்ற பெயரில் ஆய்வு மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு, தற்போதைய செயற்கைக்கோள்கள் ஒருங்கிணைப்பு தொழில்நுட்பம் பெருமளவில் உதவும். இதன் வாயிலாக மிகக்குறைந்த செலவில், விண்வெளியில் ஆய்வு மையத்தை நிறுவ முடியும்.