கிளினிக்குகளில் மோசடி: சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவு
கிளினிக்குகளில் மோசடி: சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவு
ADDED : ஜன 05, 2024 01:16 AM
புதுடில்லி, புதுடில்லியில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு ஆட்சியில் உள்ளது. இங்கு, ஆரம்ப சுகாதார நிலையங்களின் சேவைகள் கிடைக்காத இடத்தில், 'ஆம் ஆத்மி மொஹல்லா கிளினிக்குகள்' துவங்கப்பட்டன.
இந்த மொஹல்லா கிளினிக்கில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு மருந்தாளர் பணியில் இருப்பர்.
சாதாரண உடல் நல பாதிப்புகளுக்கு இங்கு இலவசமாக சிகிச்சை அளித்து, மருந்து வழங்கப்படும். ரத்தம், சிறுநீர் உள்ளிட்ட பரிசோதனைகளை தனியார் ஆய்வகங்களுக்கு பரிந்துரைப்பர். இதற்காகும் கட்டணத்தை மாநில அரசே ஏற்கும்.
இந்நிலையில், தனியார் ஆய்வகங்கள் பலனடையும் வகையில், மொஹல்லா கிளினிக்குகளில் இருந்து போலியான நோயாளிகளின் பெயரில் பரிசோதனைகள் பரிந்துரைக்கப் பட்டதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக சி.பி.ஐ., விசாரணைக்கு டில்லி துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா நேற்று உத்தரவிட்டார்.
ஏற்கனவே, டில்லி அரசு மருத்துவமனைகளுக்கு வினியோகிக்கப்படும் மருந்துகள் தரமற்று இருப்பதாக கூறி, சி.பி.ஐ., விசாரணைக்கு கவர்னர் உத்தரவிட்டிருந்தார்.
மதுபான கொள்கை ஊழல் வழக்கிலும் ஆம் ஆத்மி முக்கிய பிரமுகர்கள் சிக்கியுள்ளனர். இந்நிலையில், போலி பரிசோதனை விவகாரத்திலும் சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதால், ஆம் ஆத்மி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுஉள்ளது.