பள்ளி கட்டண மசோதா இந்த ஆண்டே அமல் கல்வி அமைச்சர் ஆஷிஷ் சூட் தகவல்
பள்ளி கட்டண மசோதா இந்த ஆண்டே அமல் கல்வி அமைச்சர் ஆஷிஷ் சூட் தகவல்
ADDED : ஆக 17, 2025 02:29 AM
புதுடில்லி:“டில்லி மாநகரில், 1,700 தனியார் பள்ளிகளும் கல்விக் கட்டண ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது,”என, கல்வி அமைச்சர் ஆஷிஷ் சூட் பேசினார்.
ஜனக்புரியில் பெற்றோருடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில், கல்வி அமைச்சர் ஆஷிஷ் சூட் பேசியதாவதுள்
சட்டசபையில் சமீபத்தில் நடந்த மழைக்காலக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டுள்ள 'கல்விக் கட்டண மசோதா -2025' இந்த கல்வி ஆண்டு முதலே அமலுக்கு வருகிறது.
இதனால், தனியார் பள்ளிகள் தன்னிச்சையாக கல்விக் கட்டணத்தை உயர்த்துவது தடுக்கப்படும். பள்ளிகளில் கட்டண நிர்ணயம் செய்வதில் வெளிப்படைத்தன்மை பின்பற்றப்படும்.
அரசு ஒப்புதல் இல்லாமல் கட்டணத்தை உயர்த்தும் பள்ளிக்கு ஒரு லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். கூடுதலாக வசூலித்த கட்டணத்தை திருப்பித் தராவிட்டால், இரட்டிப்பு அபராதம் விதிக்கப்படும். தனியார் பள்ளிகள் விதிமுறைகளைப் பின்பற்றுவதைக் கண்காணிக்க, சப்-கலெக்டருக்கு உரிய அதிகாரம் கல்வித் துறை இயக்குநருக்கும் இந்தச் சட்டம் வாயிலாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், தனியார் பள்ளிகளின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க பெற்றோர், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகி மற்றும் அரசு பிரதிநிதிகள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்படும்.
இந்தப் புதிய சட்டம், 1973ம் ஆண்டு விதிமுறைகளின் உள்ள சில குறைகளை சீர்படுத்தியுள்ளது. பழைய விதிமுறைப்படி, 300 பள்ளிகள் மட்டுமே கட்டண ஒழுங்குமுறைக் கட்டுப்பாட்டில் இருந்தன. ஆனால், புதிய சட்டத்தின் கீழ், அனைத்து தனியார் பள்ளிகளும் கொண்டுவரப்பட்டுள்ளன.
தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் வசூலிப்பது குறித்து முந்தைய காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி அரசுகள் கண்டுகொள்ளவே இல்லை. பா.ஜ., அரசு பொறுப்பேற்ற பிறகுதான் அதற்கென சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
கல்வித் துறையில் புரட்சி செய்ததாக கூறும் ஆம் ஆத்மி, அரசுப் பள்ளிகளில் எந்த மேம்பாட்டுப் பணிகளையும் செய்யவில்லை. அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்பு மற்றும் கல்வியின் தரம் மோசமாக இருந்ததால் தான், ஏராளமான பெற்றோர் தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்த்துள்ளனர்.
அரசின் புதிய சட்டப்படி கல்விக் கட்டணம் குறித்த முன்மொழிவுகளை ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 15ம் தேதிக்குள் பள்ளி அளவிலான குழுக்களும், ஜூலை 30ம் தேதிக்குள் மாவட்ட அளவிலான குழுக்களும் ஆய்வு செய்து, செப்டம்பருக்குள் இறுதி செய்யும். இதில், 45 நாட்களுக்குள் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றால் மேல்முறையீட்டுக் குழுவுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.
கல்வி வியாபாரம் ஆவதைத் தடுக்கவும், மாணவர்களின் நலனைப் பாதுகாக்கவும் பெற்றோர்கள் மற்றும் கல்வி நிபுணர்களுடன் ஆலோசித்த பிறகே இந்தச் சட்டம் இயற்றப்பட்டு சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், 200க்கும் மேற்பட்ட பெற்றோர் பங்கேற்றனர்.