பள்ளி முதல்வரை சுட்டுக் கொன்ற 12ம் வகுப்பு மாணவன்! ம.பி.யில் பயங்கரம்
பள்ளி முதல்வரை சுட்டுக் கொன்ற 12ம் வகுப்பு மாணவன்! ம.பி.யில் பயங்கரம்
ADDED : டிச 06, 2024 06:43 PM

போபால்: மத்தியப்பிரதேசத்தில் பள்ளி முதல்வரை 12ம் வகுப்பு மாணவர் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது பற்றி போலீசார் கூறி உள்ளதாவது;
சத்தர்பூர் மாவட்டத்தில் தமோரா அரசு பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் முதல்வர் சக்சேனா, 55. கடந்த 5 ஆண்டுகளாக இந்த பள்ளியில் உள்ளார். சம்பவத்தன்று பள்ளியின் கழிவறை அருகே அவர், அதே பள்ளியில் பயிலும் 12ம் வகுப்பு மாணவர் ஒருவரால் துப்பாக்கியால் சுடப்பட்டார். இதில் அவரது தலையில் குண்டுபாய, ரத்த வெள்ளத்தில் அங்கேயே சுருண்டு விழுந்தார்.
இந்த சம்பவம் நிகழ்ந்த அடுத்த சில நிமிடங்களில் கொல்லப்பட்ட முதல்வரின் ஸ்கூட்டரில், ஒருவருடன் மாணவர் தப்பிச் சென்றிருக்கிறார். சக்சேனாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்குள் அவர் இறந்துவிட்டார்.
என்ன காரணத்துக்காக அவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது தெரியவில்லை. 12ம் வகுப்பு மாணவருக்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது என்றும் தெரியவில்லை. தப்பியோடிய மாணவரை தேடி வருகிறோம். அவர் பிடிபட்டால் தான் முழு விவரங்களும் தெரியவரும்.
இவ்வாறு போலீசார் கூறி உள்ளனர்.