மாயமானோரை 3வது நாளாக காஷ்மீரில் தேடும் பணி தீவிரம்
மாயமானோரை 3வது நாளாக காஷ்மீரில் தேடும் பணி தீவிரம்
ADDED : ஆக 17, 2025 01:29 AM

ஜம்மு: ஜம்மு - காஷ்மீரில் மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி மாயமானவர்களை தேடும் பணி மூன்றாவது நாளாக நேற்றும் நீடித்தது. இதனால் மாயமானவர்களின் உறவினர்கள் கவலை அடைந்துள்ளனர்.
ஜம்மு - - காஷ்மீரின் கிஷ்துவார் மாவட்டத்தில் உள்ள சிசோட்டி கிராமத்தில், கடந்த 14ல் திடீர் மேகவெடிப்பால் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சிசோட்டியை ஒட்டிய மலைப்பாதையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கடைகள், வீடுகள், ஹோட்டல்கள், வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. காயம் அடைந்தோர் எண்ணிக்கை 100 ஆனது.
சிசோட்டி கிராமத்தில் 82 பேர் மாய மாகியுள்ளனர்.
இதில் ஒருவர் சி.ஐ.எஸ்.எப்., வீரர் மனோஜ்குமார் மற்றும் 81 பேர் பக்தர்கள். இது தவிர ஜம்மு, உதம்பூர், சம்பா மாவட்டங்களில் பலர் மாயமாகியுள்ளனர். கடந்த ஜூலை 25ல் துவங்கி செப்.,5ல் நிறைவடைய உள்ள மச்சைல் மாதா யாத்திரை வெள்ளம் காரணமாக கடந்த மூன்று நாட்களாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
போலீசார், ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படையினர், தன்னார்வலர்கள் இணைந்து நேற்று மூன்றாவது நாளாக ஒருங்கிணைந்த மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் ஈடுபட்டனர்.
ஜம்மு புறநகர் பகுதியான பெனாகர் கிராமத்தில் நான்கு குழந்தைகள் உட்பட மாயமான ஏழு பேர் என்ன ஆனார்கள் என தெரியாததால், உறவினர்கள் கவலையடைந்துள்ளனர். ஜம்முவின் நியூ பிளாட் பகுதியில் வசித்த ஐந்து பேரைக் காணவில்லை. இதுவரை மீட்கப்பட்ட, 46 உடல்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

