சர்வேயில் ஆதரவு இருந்தால் மட்டுமே 'மாஜி'க்களுக்கு பா.ஜ.,வில் 'சீட்'
சர்வேயில் ஆதரவு இருந்தால் மட்டுமே 'மாஜி'க்களுக்கு பா.ஜ.,வில் 'சீட்'
ADDED : பிப் 19, 2024 06:58 AM

பெங்களூரு: லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்பும் முன்னாள் அமைச்சர்களுக்கு, சர்வேயில் வாக்காளர்கள் ஆதரவு அளித்தால் மட்டுமே, 'சீட்' கொடுக்க பா.ஜ., தலைமை திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது.
கடந்தாண்டு சட்டசபை தேர்தலில், சோமண்ணா, ரவி, ஸ்ரீராமுலு, மாதுசாமி உட்பட முன்னாள் அமைச்சர்கள் பெரும்பாலானோர் தோல்வி அடைந்தனர்.
தற்போது நாட்டில் மீண்டும் மோடி பிரதமராக வேண்டும் என்ற அலை எழுந்துள்ளது. தற்போதைய எம்.பி.,க்களில் பலருக்கு சீட் இல்லை என்று சிலருக்கு நேரடியாகவும், சிலருக்கு நாசுக்காகவும் கட்சி மேலிடம் தெரியப்படுத்தி உள்ளது.
இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள நினைக்கும், பல முன்னாள்கள், லோக்சபாவில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளனர்.
ஏற்கனவே, முன்னாள் அமைச்சர் சோமண்ணா, தனக்கு துமகூரில் இருந்து போட்டியிட சீட் ஒதுக்க வேண்டும் என்று கட்சி மேலிட தலைவர்களை சந்தித்து பேசினார்.
கட்சியும், 'கிரீன் சிக்னல்' கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால், இத்தொகுதியில் நடக்கும் எந்த விழாவுக்கு அழைப்பு வந்தாலும், முதல் ஆளாக ஆஜராகி விடுகிறார். ஆனால், இத்தொகுதியில், முன்னாள் முதல்வர் எடியூரப்பா, தனது ஆதரவாளர் மாதுசாமிக்கு ஒதுக்க வேண்டும் என கேட்டு வருகிறார்.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் சுதாகர், ரவி, ஸ்ரீராமுலுவும் லோக்சபா தேர்தலில் போட்டியிட ஆவலுடன் உள்ளனர்.
பெங்களூரு வடக்கில் போட்டியிட ரவியும்; சிக்கபல்லாபூரில் போட்டியிட சுதாகரும்; பல்லாரியில் போட்டியிட ஸ்ரீராமுலுவும், கட்சி மேலிட தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்தினர்.
ஆனால், கட்சி மேலிடமோ புதிய யுக்தியை கையாள உள்ளது. இதுவரை முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்களுக்கு சீட் கொடுப்பது குறித்து கட்சி மேலிடம் எந்த தகவலும் அளிக்கவில்லை.
தவிர, லோக்சபா தேர்தலில் தொகுதிகள் கணக்கெடுப்பின் அடிப்படையில், வெற்றி பெறுவோருக்கு மட்டுமே சீட் வழங்க முடிவு செய்துள்ளது.
சர்வேயில் வாக்காளர்கள், முன்னாள் அமைச்சர்களுக்கு சாதகமாக பதில் அளித்தால் மட்டுமே சீட் வழங்கப்படும் என பா.ஜ., வட்டாரங்கள் தெரிவித்துஉள்ளன.

