மூணாறில் இயக்க இரண்டாவது 'டபுள் டெக்கர்' பஸ் தயார்
மூணாறில் இயக்க இரண்டாவது 'டபுள் டெக்கர்' பஸ் தயார்
ADDED : ஜன 02, 2026 02:07 AM

மூணாறு: கேரள மாநிலம் மூணாறில் இரண்டாவது 'டபுள் டெக்கர்' பஸ் இயக்க தயார் நிலையில் உள்ளது.
மூணாறின் இயற்கை அழகை ரசிக்கும் வகையில் கேரள அரசு போக்கு வரத்து கழகம் சார்பில் ' ராயல் வியூ டபுள் டெக்கர்' எனும் திட்டத்தில் ' டபுள் டெக்கர்' பஸ் சேவை கடந்தாண்டு பிப்.8ல் பயன்பாட்டுக்கு வந்தது.
பஸ்சை சுற்றிலும், கூரையும் கண்ணாடி இழை கொண்டு உருவாக்கப்பட்டதால், அதில் சுற்றுலா பயணிகள் பயணித்தவாறு வெளிப்புற காட்சிகளை ரசிக்கலாம்.
இந்த பஸ் பழைய மூணாறில் அரசு பஸ் டிப்போவில் இருந்து காலை 9:00, மதியம் 12:30, மாலை 4:00 மணிக்கு புறப்படுகிறது. கேப் ரோடு, பாறைகுகை, பெரியகானல் நீர்வீழ்ச்சி, ஆனயிறங்கல் அணை ஆகிய பகுதிகளை பார்த்து விட்டு திரும்புகின்றனர்.
இந்த பஸ் பயன்பாட்டுக்கு வந்து 10 மாதங்களில் ரூ.1.22 கோடி வருவாய் கிடைத்ததால், அது போன்று மேலும் ஒரு பஸ் இயக்கப்பட உள்ளது. அதனை கேரள போக்குவரத்து துறை அமைச்சர் கணேஷ்குமார் திருவனந்தபுரத்தில் நேற்று முன்தினம் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
மூணாறுக்கு நேற்று மாலை பஸ் வந்த நிலையில் ஒரு சில நாட்களில் போக்குவரத்து துவங்கும். ஏற்கனவே ' டபுள் டெக்கர்' இயக்கப்படும் வழித்தடத்தில் புதிய பஸ் இயக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போது 'டபுள் டெக்கர்' பஸ்சில் கட் டணம் நபர் ஒன்றுக்கு கீழ் தளத்தில் ரூ.200ம், மேல் தளத்தில் ரூ.400ம் வசூலிக்கின்றனர். அதே கட்டணம் புதிய பஸ்சில் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

