ADDED : ஜன 02, 2026 02:02 AM

மூணாறு: கேரள மாநிலம் மூணாறு அருகே மாட்டு பட்டி அணையில் இந்த ஆண்டு கடல் விமானம் இயக்கப்படுமா என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
நாட்டில் சுற்றுலாவை மேம்படுத்தி, சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மத்திய அரசு 'உடான்' திட்டம் மூலம் நீரிலும், தரையிலும் ஓடும் கடல் விமானம் (சீ பிளேன்) சேவையை செயல்படுத்தி வருகிறது.
கேரளாவில் அத்திட்டம் மூலம் கொச்சி, மூணாறு அருகில் உள்ள மாட்டுபட்டி அணை இடையே கடல் விமானம் இயக்க திட்டமிடப்பட்டது. அதன் சோதனை ஓட்டம் 2024 நவ. 11ல் நடந்தது.
கொச்சியில் அரசிடம் உள்ள போல்ஹாட்டி பேலஸ் அருகே கடல் பகுதியில் இருந்து புறப்பட்ட விமானம் மாட்டுபட்டி அணையில் வெற்றிகரமாக இறங்கியது.
கடல் விமானம் இயக்கப்படும் பட்சத்தில், அதன் மூலம் மாட்டுபட்டி அணையை சுற்றி நட மாடும் காட்டு யானை உட்பட வனவிலங்கு பாதிக்கப்படும் என வனத்துறை அறிக்கை தாக்கல் செய்ததால் திட்டத்தை செயல் படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. அதனால் சோதனை ஓட்டம் முடிந்து 13 மாதங்கள் ஆகியும் தொடர் நடவடிக்கை இன்றி உள்ளது.
ஆந்திரா உட்பட பல மாநிலங்களில் கடல் விமான சேவைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதால், மூணாறில் பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு இந்தாண்டு கடல் விமானம் இயக்கப்படுமா என சுற்றுலா ஆர்வலர்கள் இடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

