அங்கமாலி--எருமேலி சபரி ரயில் பாதையை திருவனந்தபுரத்துக்கு நீட்டிக்க பரிந்துரை
அங்கமாலி--எருமேலி சபரி ரயில் பாதையை திருவனந்தபுரத்துக்கு நீட்டிக்க பரிந்துரை
ADDED : ஜன 02, 2026 02:00 AM

சபரிமலை: அங்கமாலி - எருமேலி சபரி ரயில் பாதையை திருவனந்தபுரம் வரை நீட்டிக்க வேண்டும் என கேரள ரயில்வே வளர்ச்சி கழகம் அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
சபரிமலை வரும் பக்தர்களின் வசதிக்காக ரயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதற்காக அங்கமாலி -- எருமேலி ரயில் பாதை திட்டம் உருவாக்கப்பட்டது. 111 கிலோ மீட்டர் தூரமுள்ள இந்த ரயில் பாதையில் 14 ரயில் நிலையங்கள் ஏற்படுத்தப்படுகின்றன.
போதிய வருமானம் கிடைக்காது என்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டதால் மத்திய ரயில்வே நிறுத்தி வைத்திருந்தது.
தற்போது அங்கமாலி -- எருமேலி சபரி ரயில் பாதையை ரயில் வசதி இல்லாத பகுதிகளையும் இணைத்து மீண்டும் தொடங்குவதற்கு மாநில அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
இதன்படி எருமேலியிலிருந்து அத்திக்கயம், பெருநாடு ரோடு, பத்தனம்திட்டை, கோந்நி, பத்தனாபுரம், புனலூர், அஞ்சல், கிளிமானூர், வெஞ்ஞாற மூடு, நெடுமங்காடு, காட்டாக்கடை, பாலராமபுரம் வழியாக திருவனந்தபுரத்துக்கு இந்த பாதையை நீட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
160 கி.மீ., தூரம் உள்ள இப்பாதையில் 13 ரயில் நிலையங்கள் வருகிறது.
கேரள ரயில்வே வளர்ச்சிக் கழகம் அளித்துள்ள அறிக்கையின்படி இந்த திட்டம் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிலம் கையகப்படுத்தும் பணிக்காக மாநில அரசு அலுவலகங்களை திறந்தால் ஏற்கனவே திட்டத்தை நிறுத்தி வைத்துள்ள உத்தரவை மத்திய ரயில்வே திரும்ப பெறும் என்று கூறியுள்ளது.
இந்த பாதைக்கு மத்திய அரசும், மாநில அரசும் சரிசமமாக நிதி பங்களிப்பு செய்கிறது.

