பீஹாரில் நாளை 2ம் கட்ட தேர்தல்; இந்தியா - நேபாள எல்லை 72 மணிநேரம் மூடல்
பீஹாரில் நாளை 2ம் கட்ட தேர்தல்; இந்தியா - நேபாள எல்லை 72 மணிநேரம் மூடல்
UPDATED : நவ 10, 2025 12:35 AM
ADDED : நவ 09, 2025 10:20 PM

பாட்னா: பீஹார் சட்டசபை தேர்தலின் 2வது கட்ட ஓட்டுப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில், பாதுகாப்பு நடவடிக்கையாக இந்தியா - நேபாள எல்லை 72 மணிநேரம் மூடப்படுகிறது.
பீஹார் சட்டசபைக்கு இருகட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த நவ.,6ம் தேதி முதற்கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற்றது. சுமார் 65.08 சதவீத ஓட்டுகள் பதிவாகின. இந்த நிலையில், 20 மாவட்டங்களில் உள்ள சுமார் 122 தொகுதிகளுக்கான 2வது கட்ட ஓட்டுப்பதிவு நாளை மறுநாள் (நவ.,11) நடக்கிறது. மொத்தம் 136 பெண் வேட்பாளர்கள் உள்பட 1302 பேர் களத்தில் உள்ளனர். 45,399 மையங்களில் தேர்தல் நடக்கிறது. 3.70 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
இந்த 122 தொகுதிகளில் கடந்த 2020ம் ஆண்டு நடந்த தேர்தலின் போது, 42 இடங்களில் பாஜ வெற்றி பெற்றது. ராஷ்டிரிய ஜனதா தளம் 33 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 20 தொகுதிகளிலும், காங்கிரஸ் 11 தொகுதிகளிலும், இடதுசாரிகள் 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. 2015ம் ஆண்டு நடந்த தேர்தலில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்திருந்தது. இந்தக் கூட்டணி 122 இடங்களில் 80ல் வெற்றி பெற்றது. பாஜ 36 இடங்களில் மட்டுமே வென்றிருந்தது. எனவே, இந்த 2வது கட்ட தேர்தல் அனைத்து தரப்பினரிடையேயும் பெரும் எதிர்பார்ப்பை எழச் செய்துள்ளது.
இந்த நிலையில், பீஹார் சட்டசபைக்கான 2வது கட்ட தேர்தலையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா - நேபாள எல்லை நேற்று (நவ.,08) மாலை 6 மணி முதல் 72 மணிநேரம் மூடப்பட்டுள்ளது. சர்லாஹி, மஹோத்தரி மற்றும் ரவுத்ஹாட் உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள எல்லைப் பகுதிகள் மூன்று நாட்களுக்கு மூடப்பட்டுள்ளன. மஹோத்தரி மாவட்டத்தில் மட்டும் இந்தியாவின் பதினொரு எல்லைப் புள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
இது தொடர்பாக எல்லை மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கூறுகையில்,'அவசர காரியங்களை தவிர்த்து, எல்லைத் தாண்டி மேற்கொள்ளப்படும் பிற அனைத்து நடவடிக்கைகளும் 3 நாட்களுக்கு முழுவதுமாக நிறுத்தப்படுகிறது,' என தெரிவித்துள்ளனர்.
நேபாளம் மற்றும் இந்தியாவில் தேர்தல் நடந்தால், பாதுகாப்பு நடவடிக்கையாக 72 மணிநேரம் எல்லையை மூடுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.

