டில்லி மாநகராட்சி இடைத்தேர்தல் ஆம் ஆத்மி வேட்பாளர்கள் அறிவிப்பு வேட்புமனு தாக்கல் இன்று கடைசி நாள்
டில்லி மாநகராட்சி இடைத்தேர்தல் ஆம் ஆத்மி வேட்பாளர்கள் அறிவிப்பு வேட்புமனு தாக்கல் இன்று கடைசி நாள்
ADDED : நவ 09, 2025 10:06 PM

புதுடில்லி: மாநகராட்சியின் 12 வார்டுகளுக்கான இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள். ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர்.
டில்லி மாநகராட்சியில் காலியாக உள்ள 12 வார்டுகளுக்கான இடைத் தேர்தல் வரும், 30ம் தேதி நடக்கிறது.
இதற்கான வேட்புமனு தாக்கல் துவங்கிய நிலையிலும் ஆம் ஆத்மி கட்சி மட்டும் வேட்பாளர்களை அறிவிக்காமல் இருந்தது.
வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்ற நிலையில், ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை அக்கட்சியின் டில்லி மாநில தலைவர் சவுரவ் பரத்வாஜ் நேற்று மாலை அறிவித்தார்.
ராம் ஸ்வரூப் கனோஜியா - தக் ஷின்புரி - ராம் ஸ்வரூப் கனோஜியா, சங்கம் விஹார் ஏ - அனுஜ் சர்மா, கிரேட்டர் கைலாஷ் - ஈஷ்னா குப்தா, வினோத் நகர் - கீதா ராவத், ஷாலிமார் பாக் பி - பபிதா அலாவத், அசோக் விஹார் - சீமா விகாஸ் கோயல்.
சாந்தினி சவுக் - ஹர்ஷ் சர்மா, சாந்தினி மஹால் - முதாசிர் உஸ்மான் குரேஷி, துவாரகா பி - ராஜ்பாலா செராவத், முண்ட்கா - அனில் லக்ரா, நரைனா - ராஜன் அரோரா, டிச்சவ் கலன் - கேசவ் சவுகான் ஆகியோரை வேட்பாளர்களாக சவுரவ் பரத்வாஜ் அறிவித்துள்ளார்.
வேட்புமனுக்கள் 12ம் தேதி பரிசீலனை செய்யப்படுகின்றன. வேட்புமனுவை, 15ம் தேதிக்குள் வாபஸ் பெறலாம்.
அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
தற்போது இடைத்தேர்தல் நடக்கும், 12 வார்டுகளில் ஒன்பது வார்டுகள் பா.ஜ., வசம் இருந்தன.
மீதமுள்ள மூன்று வார்டுகளில் ஆம் ஆத்மி வென்றிருந்தது.
ஷாலிமர் பாக் பி வார்டு கவுன்சிலராக இருந்த ரேகா குப்தா சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று, டில்லி முதல்வராகவும் பதவியேற்றார்.
துவாரகா பி வார்டு பா.ஜ., கவுன்சிலராக இருந்த கமல்ஜித் செராவத், லோக்சபா தேர்தலில் மேற்கு டில்லி தொகுதியில் வெற்றி பெற்றார்.
அதேபோல, சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட பா.ஜ., மற்றும் ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் எம்.எல்.ஏ.,க்களாக தேர்வானதால், மாநகராட்சியில் 12 வார்டுகள் காலியாகின.

