மங்களூரு - திருவனந்தபுரம் இடையே இரண்டாவது வந்தே ஸ்லீப்பர் ரயில் இயக்க முடிவு!
மங்களூரு - திருவனந்தபுரம் இடையே இரண்டாவது வந்தே ஸ்லீப்பர் ரயில் இயக்க முடிவு!
ADDED : செப் 22, 2024 05:37 PM
புதுடில்லி: படுக்கை வசதியுடன் கூடிய இரண்டாவது வந்தே பாரத் ரயிலை கர்நாடக மாநிலம் மங்களூரு - கேரள மாநிலம் திருவனந்தபுரம் இடையே இயக்க ரயில்வே திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாட்டில் பல்வேறு முக்கிய நகரங்களுக்கு இடையே வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. தற்போது 75 ரயில்கள் செயல்பட்டு கொண்டுள்ளன. இந்த ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு கிடைத்து உள்ளது. இதனை தொடர்ந்து படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. இதற்கான பெட்டிகளை தயாரிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகின்றன. 16 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் ஏசி 3 அடுக்கு பெட்டிகள் 11 ம், ஓரு ஏசி பெட்டியும், இரண்டு அடுக்கு ஏசி பெட்டிகள் 4ம் இணைக்கப்பட்டு இருக்கும்.
இதன்படி, படுக்கை வசதியுடன் கூடிய முதல் வந்தே பாரத் ரயில் மஹாராஷ்டிரா மாநிலம் புனே முதல் டில்லி வரை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. விரைவில், பிரதமர் மோடி இந்த ரயிலை துவக்கி வைக்க உள்ளார்.
இரண்டாவது ரயிலை மங்களூரு - திருவனந்தபுரம் இடையே இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
மணிக்கு 160 கி.மீ., வேகத்தில் செல்லும் இந்த ரயிலில் பல வசதிகள் உள்ளன. 180 கி.மீ., வரை இதன் வேகத்தை அதிகரிக்க முடியும். படிப்பதற்கு ஏதுவாக மின்விளக்குகள், மொபைல் சார்ஜர் வசதி,சிற்றுண்டி வைத்து சாப்பிடுவதற்கான வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.
இந்த ரயிலில், விபத்துகளை தவிர்க்கும் வகையில், தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பான கவச் பொருத்தப்பட்டு உள்ளது. மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த ஏதுவாக கழிப்பறை வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.