'அரசியல் சட்ட அடிப்படை கட்டமைப்பின் ஒரு பகுதியே மதச்சார்பின்மை'
'அரசியல் சட்ட அடிப்படை கட்டமைப்பின் ஒரு பகுதியே மதச்சார்பின்மை'
ADDED : அக் 22, 2024 02:49 AM

புதுடில்லி, மதச்சார்பின்மை என்பது, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பின் ஒரு பகுதியாகவே இருந்துள்ளது என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
நாடு சுதந்திரம் பெற்று, 1950ல் குடியரசாக மாறியது. அப்போது இயற்றப்பட்ட அரசியலமைப்பு சட்டத்தின் முகவுரை, 1949, நவ., 26ல் இயற்றப்பட்டது. இதுவே, அரசியலமைப்பு சட்டத்தின் முன்னுரையாகும்.
காங்கிரசின் இந்திரா பிரதமராக இருந்தபோது 1976ல், இந்த முகவுரை திருத்தப்பட்டது.
முகவுரையில், 'இறையாண்மை, ஜனநாயக, குடியரசு நாடு' என்ற வார்த்தைகளுக்கு இடையே, 'சோஷலிஸ்ட்' எனப்படும் சமூகவுடைமை மற்றும் 'செக்யூலர்' எனப்படும் மதச்சார்பின்மை என்ற வார்த்தைகள் சேர்க்கப்பட்டன.
இதன்படி, 'நாம், இந்திய மக்கள், உறுதி கொண்டு முறைப்படி தீர்மானித்து, இந்தியாவை ஓர் இறையாண்மை, சமூகத்துவ, மதச்சார்பற்ற, ஜனநாயக, குடியரசாக கட்டமைத்திட' என, துவங்கும் வகையில் முகவுரை மாற்றப்பட்டது. மேலும், இது, 1949, நவ., 26ல் இருந்து நடைமுறைக்கு வருவதாக சட்டத் திருத்தம் கூறுகிறது.
இந்த சட்டத் திருத்தத்தை எதிர்த்தும், சமூகவுடைமை, மதச்சார்பின்மை வார்த்தைகளை நீக்கக் கோரியும், பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி, வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்குகள், நீதிபதிகள் சஞ்சிவ் கண்ணா, சஞ்சய் குமார் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.
அப்போது, மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டதாவது:
அரசியலமைப்பு சட்டத்தின் முகவுரை, 1949ல் ஏற்கப்பட்டுள்ளது. அதில் திருத்தம் செய்ய முடியாது. ஆனால், 42வது அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின் வாயிலாக, இதில் சில வார்த்தைகள் சேர்க்கப்பட்டுள்ளன; அது செல்லாது.
அவ்வாறு செல்லும் என்றால், அடுத்து வரும் அரசுகளும், தங்களுக்கு ஏற்ப முகவுரையை தொடர்ந்து திருத்தம் செய்ய வாய்ப்பு ஏற்படுத்தி தந்துவிடும்.
மேலும், முன்தேதியிட்டு, சட்டத் திருத்தத்தை கொண்டு வரவும் முடியாது. முகவுரையை எழுதியபோது, சோஷலிசம் என்ற வார்த்தையை சேர்த்தால், மக்களின் தனிநபர் சுதந்திரம் பாதிக்கப்படும் என்பதாலேயே அதை அம்பேத்கர் சேர்க்கவில்லை.
அதனால், 42வது சட்டத் திருத்தம் செல்லாது என்று அறிவித்து, சோஷலிசம் மற்றும் மதச்சார்பின்மை ஆகிய வார்த்தைகளை நீக்கி, 1949ல் நிறைவேற்றப்பட்ட முகவுரையைத் தொடர உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் வாதிட்டனர்.
இதைத் தொடர்ந்து அமர்வு உத்தரவிட்டதாவது:
அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பின் ஒரு பகுதியே மதச்சார்பின்மை என்பதை இந்த நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் குறிப்பிட்டுள்ளது.
சமத்துவம், சகோதரத்துவம் உள்ளிட்ட வார்த்தைகள் அரசியலமைப்பு சட்ட முகவுரையில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவை, மதச்சார்பின்மை என்பதையே குறிப்பிடுகின்றன.
அரசியலமைப்பு சட்டத்தின் ஒரு பகுதியாகவே மதச்சார்பின்மை இருந்துள்ளது.
அதே நேரத்தில், இந்த முகவுரையை சட்டத் திருத்தம் வாயிலாக திருத்தம் செய்ய முடியுமா. அதுவும் முன்தேதியிட்டு நடைமுறைபடுத்த முடியுமா என்பது குறித்து ஆராயப்படும்.
இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.
வழக்கின் விசாரணை, நவ., 18ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.