ADDED : மே 08, 2025 01:02 AM
புதுடில்லி: நம் நாட்டில் 244 மாவட்டங்களில் உள்ள பல்வேறு நகரங்களில் நேற்று மாலை பாதுகாப்பு ஒத்திகை நடந்தது. ராஜஸ்தான் 28, ஜம்மு - காஷ்மீர் 20, பஞ்சாப் 20, குஜராத் 18, டில்லி 11 மாவட்டங்களில் பாதுகாப்பு ஒத்திகை நடந்தது.
பள்ளிகள், பொது இடங்கள், சந்தைப் பகுதிகள் ஆகியவற்றில் நடந்த ஒத்திகையில் தன்னார்வலர்கள் பங்கேற்றனர். அச்சுறுத்தல் தொடங்கியதைக் குறிக்கவும், மீட்பு நடவடிக்கைகளை துவங்கவும், அச்சுறுத்தல் முடிந்ததைக் குறிக்கவும், மூன்று வகை சைரன்கள் ஒலிக்கப்பட்டன.
அப்போது பொதுமக்கள் எப்படி செயல்பட வேண்டும் என்ற விளக்கம் காண்பிக்கப்பட்டது. காயமடைந்தவர்களை மீட்பது, முதலுதவி வழங்குவது, பதுங்கிக்கொள்வது ஆகியவை குறித்த செயல் விளக்கமும் காட்டப்பட்டன.
டில்லியில் ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள விஜய் சவுக், அக்ஷர் தாம், கான் மார்க்கெட் பகுதி, ராஜஸ்தானில் ஜெய்சால்மர் கோட்டை பகுதி ஆகிய இடங்களில் போர் ஒத்திகைக்காக சில நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

