நடிகை வழக்கில் சென்னை ஐகோர்ட் உத்தரவிற்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் சீமான் மேல்முறையீடு
நடிகை வழக்கில் சென்னை ஐகோர்ட் உத்தரவிற்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் சீமான் மேல்முறையீடு
ADDED : பிப் 27, 2025 06:12 PM

புதுடில்லி: நடிகை விஜயலட்சுமி வழக்கில் சென்னை ஐகோர்ட்பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இவருக்கு எதிராக வளசரவாக்கம் போலீசில் நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சீமான் மீது மோசடி, கற்பழிப்பு, கொலை மிரட்டல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் 2011-ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் 2023ல் சீமான் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், ''வழக்கை சாதாரண வழக்காக கருத முடியாது. விஜயலட்சுமி புகாரை திரும்ப பெற்றாலும் பாலியல் வன்கொடுமை சட்டப்பிரிவின் கீழ் சீமானுக்கு எதிரான புகாரை 12 வாரத்துக்குள் விசாரித்து காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கில் விரிவான தீர்ப்பை பின்னர் பிறப்பிக்கிறேன்'' என உத்தரவிட்டு சீமானின் மனுவை தள்ளுபடி செய்தார்.
இந்த வழக்கில் நாளை ஆஜராக வேண்டும் என சீமான் வீட்டில் போலீசார் சம்மனை ஒட்டினர். அப்போது, வீட்டின் காவலாளிக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் சீமான் வீட்டு காவலாளி அமல்ராஜ் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். இரண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
அதேநேரத்தில், நாளை போலீசார் முன்பு ஆஜராக மாட்டேன். முடிந்ததை செய்து பாருங்கள் என சீமான் கூறியுள்ளார்.
இந்நிலையில், சென்னை ஐகோர்ட் உத்தரவிற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் சீமான் மேல்முறையீடு செய்துள்ளார். அந்த மனுவில், '' 12 வாரத்திற்குள் விரைந்து விசாரிக்க வேண்டும் என்ற சென்னை ஐகோர்ட் உத்தரவிற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். வழக்கில் முன் வைக்கப்பட்ட வாதங்கள், அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும், '' என அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.