ADDED : அக் 18, 2024 07:42 AM
கோலார்: சட்டவிரோதமாக வன விலங்குகளின் தோல்கள், உறுப்புகள் விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்ததை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கோலாரின் திம்பா சாமனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் குமார், 40. இவர் நரி, சிறுத்தை, காட்டு பன்றிகளின் பற்கள், புள்ளி மான்களின் கொம்பு, தோல்கள் ஆகியவற்றை பதுக்கி வைத்துள்ளதாக கோலாரின் கிராம போலீசாருக்கு தகவல் வந்தது.
விசாரணைக்கு பின், அவர் கைது செய்யப்பட்டார். வனவிலங்குகளின் தோல், பற்கள், கொம்புகள் பங்கார்பேட்டையில் உள்ள வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்தார்.
இதன்படி போதைப் பொருள் ஒழிப்பு, சைபர் கிரைம் போலீசார் ஆகியோருடன் கோலார் கிராம போலீசார் இணைந்து பங்கார்பேட்டையில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது 3 புள்ளி மான்களின் தோல்கள், 2 மான் கொம்புகள், ஒரு நரித்தோல், சிறுத்தை, காட்டுப்பன்றிகள், நரியின் தலா 2 பற்கள், 4 கரடி பற்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
வனவிலங்கு வேட்டையில் யார் யார் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்து விசாரித்தனர். அந்த கும்பலுக்கு போலீசார் வலை வீசி உள்ளனர்.