ADDED : பிப் 22, 2024 01:06 AM

புதுடில்லி, உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பாலி எஸ்.நாரிமன், டில்லியில் உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 95.
நம் அண்டை நாடான மியான்மரில், முன்னர் யாங்கூன் என அழைக்கப்பட்ட ரங்கூன் நகரில், 1929 ஜன., 10ம் தேதி பிறந்த பாலி எஸ்.நாரிமன், 1950 நவம்பரில், மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பதிவு செய்தார். 1961ம் ஆண்டில், மூத்த நீதிபதியாக அவர் நியமிக்கப்பட்டார்.
ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கறிஞராக பணியாற்றிய பாலி எஸ்.நாரிமன், முதலில் மும்பை உயர் நீதிமன்றத்திலும், 1972ம் ஆண்டு முதல், உச்ச நீதிமன்றத்திலும் வழக்கறிஞராக பணியாற்றினார்.
அரசியலமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை நிலைநாட்டுவதில் அதிக அக்கறை காட்டிய பாலி எஸ்.நாரிமன், இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவராக, 1991 - 2010 வரை இருந்துள்ளார்.
நீதி, அரசியல் துறைகளில் முக்கியத்துவம் வாய்ந்த கருத்துக்களையும், ஆலோசனைகளையும் வழங்கி வந்த அவருக்கு, 1991-ல் பத்மபூஷண், 2007-ல் பத்மவிபூஷண் விருதுகளை வழங்கி மத்திய அரசு கவுரவித்தது.
இந்நிலையில், தலைநகர் டில்லியில் வசித்து வந்த மூத்த வழக்கறிஞர் பாலி எஸ்.நாரிமன், உடல்நலக் குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக நேற்று காலை காலமானார்.
இவரது மறைவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக கவர்னர் ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துஉள்ளனர்.
நாரிமன் மிகச்சிறந்த வழக்கறிஞர். சாதாரண குடிமக்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக தன்னை அர்ப்பணித்தார். அவரது மறைவு வேதனை அளிக்கிறது.
பிரதமர் மோடி
பாலி நாரிமனின் மறைவு வருத்தம் அளிக்கிறது. அவர் ஒரு சிறந்த சட்ட வல்லுனர் மற்றும் அறிவாளி.
டி.ஒய்.சந்திரசூட்
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி