காங்., மூத்த தலைவர் புகார் ஆம் ஆத்மி கட்சி மீது வழக்கு
காங்., மூத்த தலைவர் புகார் ஆம் ஆத்மி கட்சி மீது வழக்கு
ADDED : ஜூலை 11, 2025 09:24 PM

சண்டிகர்:சிரோமணி அகாலி தளம் மூத்த தலைவர் விக்ரம் சிங் மஜிதியா மீதான வழக்கு தொடர்பாக, காங்கிரஸ் மூத்த தலைவர் பிரதாப் சிங் பஜ்வா சமூக வலைதளத்தில் பதிவிட்ட 'வீடியோ' வில் திருத்தம் செய்து அவதுாறு பரப்பியதாக, ஆம் ஆத்மி கட்சி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பிரதாப் சிங் பஜ்வா, போலீசில் கொடுத்த புகார்:
சிரோமணி அகாலி தளம் கட்சியின் மூத்த தலைவர் விக்ரம் சிங் மஜிதியா சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக, சமூக வலைதளத்தில் நான் ஒரு வீடியோ பதிவிட்டேன். அந்த வீடியோவில், எனக்கு எதிராக திருத்தம் செய்து, ஆம் ஆத்மி கட்சி பரப்பி வருகிறது. ஆம் ஆத்மி தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
இதுதொடர்பாக, சண்டிகர் போலீசார், பி.என்.எஸ்., சட்டப் பிரிவுகள் 336(4), 356 மற்றும் 61(2) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து, பிரதாப் சிங் பஜ்வா கூறியதாவது:
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சிரோமணி அகாலி தளம் கட்சியின் மூத்த தலைவர் விக்ரம் சிங் மஜிதியா வீட்டுக்குள், ஊழல் தடுப்புப் பிரிவினர் அதிகாலையில் அதிரடியாக நுழைந்தனர். மணிக்கணக்கில் சோதனை நடத்திய பின், மஜிதியாவை கைது செய்தனர். மஜிதியா மனைவி கனீவ் கவுர், எம்.எல்.ஏ.,வாக பதவி வகிக்கிறார்.
பஞ்சாப் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், சட்டத்தை மீறும் வகையில், அதிகாலை நேரத்தில் மஜிதியா வீட்டின் படுக்கையறைக்குள் கூட நுழைந்துள்ளனர். ஒரு பெண்ணிடம் இதுபோன்ற நடந்து கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இதுகுறித்து, ஜூன் 25ம் தேதி மாலை 3.13 மணிக்கு சமூக வலைதளத்தில், 3.48 நிமிடம் கொண்ட வீடியோவை வெளியிட்டேன்.
ஆனால், ஆம் ஆத்மியின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகங்களில் என் வீடியோவில் திருத்தம் செய்து அவதுாறு செய்யும் வகையில் வெளியிட்டுள்ளனர். அந்த போலி வீடியோவில் நான் மஜிதியாவை ஆதரிப்பது போல சித்தரித்துள்ளனர். திருத்தப்பட்ட வீடியோக்களை ஆம் ஆத்மி தலைவர்கள் சமூக வலை தளங்களில் பரப்பி வருகின்றனர்.
நிதியமைச்சர் ஹர்பால் சிங் சீமா, தன் பதவி நிலையையும் மறந்து, போலி வீடியோவை பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். அமைச்சர் அமன் அரோரா மற்றும் ஆம் ஆத்மி பஞ்சாப் பேஸ்புக் பக்கத்திலும் இது பதிவிடப்பட்டுள்ளது.
அரசியலில் என் நற்பெயரையும், காங்கிரஸ் கட்சியின் நற்பெயரையும் கெடுக்க ஆம் ஆத்மி இதுபோன்ற விஷமத்தனத்தை செய்து வருகிறது. அதிகாரிகளின் நடத்தையைத்தான் நான் விமர்சித்தேன். மஜிதியாவுக்கு ஆதரவாக நான் செயல்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.