மத்திய வருவாய் துறை செயலராக மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி நியமனம்
மத்திய வருவாய் துறை செயலராக மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி நியமனம்
ADDED : டிச 26, 2024 04:46 AM
புதுடில்லி : மத்திய அரசின் வருவாய்த்துறை செயலராக இருந்த சஞ்சய் மல்ஹோத்ரா, சமீபத்தில் ரிசர்வ் வங்கி கவர்னராக நியமிக்கப்பட்டார்.
இதன் காரணமாக காலியாக இருந்த அப்பதவிக்கு, மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி அருணிஷ் சாவ்லாவை மத்திய அரசு நியமித்துள்ளது.
பீஹாரில் இருந்து, 1992ல் ஐ.ஏ.எஸ்., அதிகாரியான இவர், தற்போது மத்திய கலாசாரத்துறை மற்றும் சுகாதாரத் துறையின் கீழ் உள்ள மருந்துகள் பிரிவின் செயலராக உள்ளார்.
இதில், மருந்துகள் பிரிவுக்கு இந்திய தனித்துவ அடையாள மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ள அமித் அகர்வாலை மத்திய அரசு நியமித்துள்ளது.
எனினும், கலாசாரத் துறைக்கு புதிய செயலர் நியமிக்கப்படும் வரை, அருணிஷ் சாவ்லா அப்பணியை கூடுதலாக கவனிப்பார் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதேபோல் மத்திய உயர்க் கல்வித்துறை செயலராக, மணிப்பூர் மாநில தலைமைச் செயலர் வினீத் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜவுளித்துறை செயலர் ரச்சனா ஷா, மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை செயலராகவும், தேசிய சிறுபான்மை கமிஷனின் செயலராக மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி சஞ்சய் சேத்தியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே, இப்பதவியில் இருந்த நீலம் ஷமி ராவ், ஜவுளித்துறை செயலராக மாற்றப்பட்டுள்ளார்.