இலவச வாக்குறுதி திட்டங்கள் தண்டம்; கர்நாடக காங்., மூத்த தலைவர் காட்டம்
இலவச வாக்குறுதி திட்டங்கள் தண்டம்; கர்நாடக காங்., மூத்த தலைவர் காட்டம்
ADDED : அக் 14, 2025 06:19 AM

உத்தர கன்னடா : “நான் முதல்வராக இருந்திருந்தால், இலவச வாக்குறுதி திட்டங்களை செயல்படுத்தியிருக்க மாட்டேன். இந்த திட்டங்கள் தண்டம். இதனால், மாநிலத்தில் வளர்ச்சி பணிகள் பாதித்துள்ளன,” என, கர்நாடக காங்., மூத்த தலைவர் தேஷ்பாண்டே தெரிவித்தது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவில், 'அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்க அனுமதி, மகளிருக்கு மாதம், 2,000 ரூபாய், மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம், ஒருவருக்கு 10 கிலோ இலவச அரிசி, வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் 3,000 ரூபாய்' என்ற ஐந்து வாக்குறுதிகள், 2023 சட்டசபை தேர்தலின் போது காங்., சார்பில் அளிக்கப்பட்டன.
காங்., வெற்றி பெற்று சித்தராமையா முதல்வரானதும், இந்த திட்டங்கள் அடுத்தடுத்து செயல்படுத்தப்பட்டன. இத்திட்டங்களுக்கு மட்டும் ஆண்டுக்கு, 56,000 கோடி ரூபாய் செலவாகிறது.
இதனால், பிற வளர்ச்சி பணிகளுக்கு நிதியில்லாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில், முன்னாள் அமைச்சரும், காங்., மூத்த தலைவருமான தேஷ்பாண்டே, உத்தர கன்னடா அருகே நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசியதாவது:
கர்நாடகாவின் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது. இதற்கு, இலவச வாக்குறுதி திட்டங்களே முக்கிய காரணம். இதனால், வளர்ச்சி திட்டங்களுக்கு பணம் இல்லை; பணிகள் முடங்கிஉள்ளன.
வாக்குறுதி திட்டங்கள் எல்லாமே தண்டம்; வீண். திட்டங்கள் மக்களுக்கு பயன்படுகிறது என்றாலும், அரசை நடத்துவது கஷ்டம்.
இத்திட்டங்களால் பெண்கள் மட்டுமே அதிக லாபம் அடைகின்றனர். அனைத்து பஸ்களிலும் பெண்களே நிரம்பியுள்ளனர். அரசு பஸ்களில் நான்கு ஆண்கள் செல்வதே கஷ்டமாக உள்ளது. அவை பெண்களின் பஸ்களாக உள்ளன.
இத்தகைய திட்டங்களை முதல்வர் சித்தராமையா அளித்துள்ளார். நான் முதல்வராக இருந்திருந்தால், இலவச வாக்குறுதி திட்டங்களை கொண்டு வந்திருக்கவே மாட்டேன். இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தும்படி, முதல்வருக்கு யார் ஆலோசனை கூறியது என்று தெரியவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.
தேஷ் பாண்டேவின் பேச்சு சமூக வலைதளங்களில் பரவி அரசியலிலும், கட்சியிலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் எரிச்சல் அடைந்துள்ள முதல்வர் சித்தராமையா, இது குறித்து விள க்கம் அளிக்கும்படி தேஷ்பாண்டேவுக்கு உத்தரவிட்டுள்ளார்.