செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை... பகீர்! சாட்சிகளுக்கு பயம் ஏற்பட்டுள்ளதாக வாதம்
செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை... பகீர்! சாட்சிகளுக்கு பயம் ஏற்பட்டுள்ளதாக வாதம்
ADDED : பிப் 13, 2025 02:13 AM
'செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கப்பட்டு அவர் அமைச்சராக பொறுப்பேற்றவுடன், இந்த வழக்கில் தொடர்புடைய பலரது நடவடிக்கைகள் மாறியுள்ளன, அவர்கள் அச்சத்துக்கு உள்ளாகி இருக்கின்றனர். எனவே, அவரது ஜாமினை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்' என, அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் நேற்று வாதிட்டது.
அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக, லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையினர், கடந்த 2023, ஜூன் 14ம் தேதி செந்தில் பாலாஜியை கைது செய்தனர்.
பல கட்ட விசாரணைக்கு பின், கடந்த செப்டம்பரில் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. அதைத் தொடர்ந்து, அவர் உடனடியாக அமைச்சராகவும் பொறுப்பேற்றார்.
செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்றதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வித்தியா குமார் என்பவர் மனு தாக்கல் செய்தார். செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்றதால் இந்த வழக்கில் சாட்சியங்களின் மீது நேரடியாக தாக்கம் ஏற்படும் என்றும் வழக்கு விசாரணை நேர்மையாக நடக்காது என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
ஏற்கனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசு சார்பில் பதில் மனுக்கள் தாக்கலாகி இருந்தன. இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய்.எஸ்.ஓஹா மற்றும் உஜ்ஜல் புயான் அமர்வில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டுகள் அதிதீவிரமானது. வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே, எப்படி மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்க முடியும்? உடனே அமைச்சராக பொறுப்பேற்பதற்கு என்ன அவசரம்?
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்தபோதே அதிருப்தியை வெளிப்படுத்தினோம். ஆனால், அதை பெரிதாக செந்தில் பாலாஜி தரப்பு எடுத்துக் கொள்ளவில்லை.
இவ்வழக்கில் நுாற்றுக்கணக்கான அரசு ஊழியர்கள், எதிர்தரப்பு சாட்சிகள் உள்ளன. ஜாமின் பெற்று வெளியே வந்த உடனேயே செந்தில் பாலாஜி அமைச்சராக பொறுப்பேற்றார். அதனால், சாட்சிகளுக்கு பயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அவர்கள் எப்படி தைரியமாக சாட்சியம் அளிக்க முன் வருவர்?
இனியும் செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர வேண்டுமா என்பது குறித்து அவரே பதில் அளிக்கட்டும். ஒருவேளை, அமைச்சராகத்தான் தொடருவேன் என, அவர் கூறினால், வழக்கை மீண்டும் பட்டியலிட்டு விசாரணை நடத்த தயாராக உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பின்னர் அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடு கையில், ''வழக்கு தொடர்பான விசாரணையின்போது, தடயவியல் நிபுணர் நீதிமன்றத்திற்கு தொடர்ந்து வந்து கொண்டிருந்தார். ஆனால், செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்ததும், நீதிமன்றம் வருவது கிடையாது. இப்படி பலருடைய நடவடிக்கைகள் திடீரென மாறி உள்ளன.
''இதனால், அனைவரும் அச்சத்துக்குள்ளாகி உள்ளனர் என்பது தெரிய வருகிறது. எனவே, செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமினை உடனடியாக ரத்து செய்து, அவரை மீண்டும் சிறையில் அடைக்க வேண்டும். ஏற்கனவே இது தொடர்பாக இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதை உச்ச நீதிமன்றம் உடனடியாக விசாரிக்க வேண்டும்,” என வாதிட்டார்.
இதையடுத்து, நீதிபதிகள் வழக்கின் விசாரணையை வரும் மார்ச் 4க்கு தள்ளி வைத்தனர்.
-டில்லி சிறப்பு நிருபர் -