ஒரு காலத்தில் கேட்டு கேட்டு வாங்கினார்; தற்போது மருந்துக்கும் வரி விதிக்கிறார் அமெரிக்க அதிபர் அடுத்த அட்டூழியம்
ஒரு காலத்தில் கேட்டு கேட்டு வாங்கினார்; தற்போது மருந்துக்கும் வரி விதிக்கிறார் அமெரிக்க அதிபர் அடுத்த அட்டூழியம்
ADDED : செப் 27, 2025 06:58 AM

வாஷிங்டன்: வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு, வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் 100 சதவீதம் சுங்க வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற பின், நாள்தோறும் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறார். இந்நிலையில், தற்போது வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு, 100 சதவீதம் சுங்க வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
இந்த புதிய நடைமுறை வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் உற்பத்தி ஆலை இல்லாத அனைத்து நிறுவன மருந்துகளுக்கும் இது பொருந்தும் எனவும், அமெரிக்காவில் ஆலை கட்டுமானப் பணியை துவங்கினால் வரி இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்திய மருந்துகள் ஏற்றுமதியின் முக்கிய சந்தையாக அமெரிக்கா உள்ளது. கொரோனா பரவல் மற்றும் அதைத் தொடர்ந்து, முக்கிய உயிர் காக்கும் மருந்துகளை வழங்கும்படி, இந்தியாவை அமெரிக்கா கேட்டுக் கொண்டது. தற்போது, இந்த வரி விதிப்பு, இந்திய நிறுவனங்களை குறி வைத்து அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பாதிப்பு ஏற்படாது
இந்த வரி விதிப்பு குறித்து இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் சார்பில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியாவின் ஏற்றுமதியில் பெரும்பகுதி பொதுவான அதாவது 'ஜெனரிக்' எனப்படும் மருந்தாக உள்ளதால், அவற்றுக்கு உடனடியாக பாதிப்பு ஏற்படாது. ஆனால், சில முன்னணி மருந்து நிறுவனங்கள் சந்தைப்படுத்தும் சிறப்பு மருந்து பொருட்களுக்கு இந்த வரி பொருந்த வாய்ப்புள்ளது.
இந்திய மருந்து நிறுவனங்கள் தங்களின் மொத்த வருவா யில் 40 முதல் 50 சதவீதம் வரை அமெரிக்க சந்தையிலிருந்து பெறுவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் மொத்த மருந்து ஏற்றுமதியில் 40 சதவீதம் அமெரிக்க சந்தைக்கு அனுப்பப்படுகிறது. அமெரிக்காவின் மொத்த மருந்து இறக்குமதியில் கடந்த 2024ல் இந்தியாவின் பங்களிப்பு 6 சதவீதமாக இருந்தது. இந்தாண்டின் முதல் அரையாண்டில் மட்டும் 32,000 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்துகளை இந்திய மருந்து நிறுவனங்கள் ஏற்றுமதி செய்துள்ளன. இந்த அறிவிப்பால் சில பா திப்புகள் இருந்தாலும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது. இவ்வாறு அவை கூறியுள்ளன.