செந்தில் பாலாஜி மீதான வழக்கு: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
செந்தில் பாலாஜி மீதான வழக்கு: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
ADDED : ஜன 28, 2025 06:19 AM

புதுடில்லி : தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கின் விசாரணை நிலை அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் வைத்து சமர்ப்பிக்கும்படி, சிறப்பு நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
தமிழக போக்குவரத்து துறையில் வேலை பெற்றுத் தருவதாக லஞ்சம் வாங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில், அமலாக்க துறையினர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். பின், கடந்த உச்ச நீதிமன்றம் ஜாமினில் வெளிவந்து அமைச்சரானார். உடனடியாக அமைச்சர் பொறுப்பும் வழங்கப்பட்டது.
செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கியது மற்றும், அவர் அமைச்சராக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
இந்நிலையில், செந்தில் பாலாஜிக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைத்து விசாரிக்கும் சிறப்பு விசாரணை நீதிமன்றத்தின் முடிவிற்கு எதிராக, ஒய்.பாலாஜி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் அபய் எஸ்.ஓஹா மற்றும் உஜ்ஜல் புயான் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'இந்த வழக்கில் 2,000 பேர் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைக்கப்பட்டுள்ளனர். ஆனால், இவை அனைத்தும் ஒன்றாக விசாரிக்கப்படும் முடிவை சிறப்பு நீதிமன்றம் எடுத்திருக்கிறது எனில், அத்தனை பேரும் விசாரிக்கப்பட்டால் விசாரணை முடிய வெகு காலம் ஆகும். எனவே, இந்த விவகாரத்தில் மூல குற்றம் சாட்டப்பட்ட நபராக இருக்கும் செந்தில் பாலாஜியை மட்டும் தனியாக பிரித்து விசாரிக்க வேண்டும்' என்று கோரினர்.
இதையடுத்து நீதிபதிகள், 'இந்த விவகாரத்தில் மனுதாரருக்கு ஏதேனும் நிவாரணம் வேண்டும் என்றால், சென்னை உயர் நீதிமன்றத்தை நாடலாம்' என, அறிவுறுத்தினர்.
அதேநேரம், 'செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கின் விசாரணை எவ்வாறு நடக்கிறது என்பது போன்ற விபரங்களை, நிலை அறிக்கையாக சீலிடப்பட்ட கவரில், பிப்., 24க்குள் உச்ச நீதிமன்றத்தில், சிறப்பு நீதிமன்றம் தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டு, விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.