எவ்வளவு பெரிய மழை வந்தாலும் சமாளிப்போம்; முதல்வர் ஸ்டாலின்
எவ்வளவு பெரிய மழை வந்தாலும் சமாளிப்போம்; முதல்வர் ஸ்டாலின்
UPDATED : அக் 19, 2025 07:19 PM
ADDED : அக் 19, 2025 07:04 PM

சென்னை: எவ்வளவு பெரிய மழை பெய்தாலும், அதனை சமாளிப்பதற்கு தயாராக இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு நடத்தினார். தலைமை செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளும் பங்கேற்றனர். அப்போது, வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மக்களின் புகார்களை அதிகாரிகள் எவ்வாறு கையாளுகின்றனர் என்பதை பற்றியும் கேட்டறிந்தார்.
மழையால் பாதிக்கப்பட்டுள்ள தேனி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்ட கலெக்டர்களிடம் ஆலோசனை நடத்தினார். மழை பாதிப்பு நிலவரங்கள் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்தும் கலெக்டர்களிடம் கேட்டறிந்தார். அதேபோல, அதிக மழைப்பொழிவுக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள கோவை, நீலகிரி, திருவாரூர், தேனி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர்களிடம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் கேட்டறிந்தார்.
அதன்பிறகு செய்தியாளர்களிடம் முதல்வர் பேசியதாவது; விருதுநகர், தேனி, ராமநாதபுரம், நீலகிரி (கோத்தகிரி) மாவட்டத்தில் அதிக மழை பெய்துள்ளது. அங்கு எந்தவித அசம்பாவிதமும் நடக்கவில்லை. அக்.,21 மற்றும் 22ம் தேதிகளில் அதிக மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், புயலுக்கு வாய்ப்பிருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரையில் முகாம்களில் தங்க வைப்பதோ, கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்களை அப்புறப்படுத்தவோ இல்லை. இருப்பினும், தயார் நிலையில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது, எனக் கூறினார்.
அப்போது, டெல்டா மாவட்டங்களில் பெய்யும் கனமழையினால் நெற்பயிர்கள் பெருமளவு சேதமடைந்துள்ளதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு; அது யாரு சொன்னா, எதிர்க்கட்சி தலைவர் தான் சொல்லிக் கொண்டு வருகிறார். தவறான செய்தி. அதற்கு எல்லாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். இன்னும் இரு வாரங்களில் பணிகள் முடிக்கப்படும், எனக் கூறினார்.
சென்னையில் கனமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, 'கடந்த இரண்டு, மூன்று மாதங்களாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறோம். எவ்வளவு பெரிய மழை பெய்தாலும், அதனை சமாளிப்பதற்கு இந்த அரசு தயாராக உள்ளது,' என்றார்.