முன்னாள் மேல்சாந்திகளுக்கு தனி அடையாள அட்டை; தேவசம்போர்டு முடிவு
முன்னாள் மேல்சாந்திகளுக்கு தனி அடையாள அட்டை; தேவசம்போர்டு முடிவு
ADDED : நவ 26, 2024 01:15 AM
சபரிமலை: சபரிமலையில் ஓய்வு பெற்ற மேல் சாந்திகளுக்கு தனி அடையாள அட்டை வழங்க திருவிதாங்கூர் தேவசம்போர்டு முடிவெடுத்துள்ளது.
சபரிமலை மற்றும் மாளிகைப் புறம் கோயில்களில் மேல் சாந்திகளாக தேர்வு பெறுபவர்களின் பதவி காலம் ஒரு ஆண்டு மட்டும்தான். அதன் பின்னர் இவர்கள் இந்த பதவிக்கு போட்டியிட இயலாது. பணி நிறைவு பெற்ற பின்னர் சபரிமலை வரும்போது தங்களுக்கு சரியான தரிசன வசதி கிடைக்கவில்லை என வருத்தமடைந்தனர். இதை தொடர்ந்து அவர்களுக்கு தனி அடையாள அட்டை வழங்க தேவசம்போர்டு முடிவெடுத்துள்ளது.
இதன்படி ஓய்வு பெற்ற மேல் சாந்திகளுக்கு சபரிமலை நிர்வாக அதிகாரி இந்த அடையாள அட்டையை வழங்குவார். இந்த அடையாள அட்டையை தவறாக பயன்படுத்த மாட்டோம், தன்னை அடையாளம் காண்பதற்காக மட்டுமே இதை பயன்படுத்துவோம், தேவசம்போர்டு கேட்டால் அடையாள அட்டையை எப்போது வேண்டுமானாலும் திருப்பிக் கொடுப்போம் என்ற உறுதிமொழியின் அடிப்படையில் இந்த அடையாள அட்டை வழங்கப்படும்.பல ஆண்டுகளுக்கு முன்பு இங்கு மேல் சாந்தியாக பணியாற்றிய ஒருவர் சபரிமலை தரிசனத்திற்கு வந்த போது ஊழியர்கள் அடையாளம் காணாததால் சர்ச்சை ஏற்பட்டதை தொடர்ந்து தேவசம்போர்டு இந்த முடிவு எடுத்துள்ளது.