பிரிவினைவாத தலைவர் உடல்நிலை திஹார் சிறை நிர்வாகம் அறிக்கை
பிரிவினைவாத தலைவர் உடல்நிலை திஹார் சிறை நிர்வாகம் அறிக்கை
ADDED : ஜூன் 27, 2025 08:49 PM

புதுடில்லி:ஜம்மு - -காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் ஷபீர் அஹமது ஷா உடல்நிலை சீராக இருப்பதாக திஹார் சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, திஹார் சிறை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜம்மு - -காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் ஷபீர் அஹமது ஷா, உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அரசியல் கட்சிகள் மற்றும் அவரது மகள் ஷா கூறுவது உண்மை அல்ல.
அவருக்குத் தேவையான மருத்துவச் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அவரது உடல்நிலை சீராக உள்ளது. சிறுநீர் பாதை தொற்று காரணமாக கடந்த,26ம் தேதி சப்தர்ஜங் மருத்துவமனைக்கு ஷா அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு, பரிசோதனைகள் செய்யப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பயங்கரவாத நிதியுதவி மற்றும் தேசவிரோத நடவடிக்கைக்காக, 2019ம் ஆண்டு ஜூன், 4ம் தேதி தேசிய புலனாய்வு முகமையால் கைது செய்யப்பட்ட ஷபீர் அஹமது ஷா, திஹார் முதலாம் எண் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
ஷா மகள் சேஹர் ஷபீர், சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “என் தந்தைக்கு நீதி வேண்டும். அவரது உடல்நிலை மீது அரசு இரக்கம் காட்ட வேண்டும்.
''இதில் அரசியல் செய்யக்கூடாது. அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பது தேச விரோதம் அல்ல. என் தந்தை, 38 ஆண்டுகள் தண்டனை இல்லாமல் சிறையில் கழித்துள்ளார்,” என, கூறியுள்ளார்.