ADDED : டிச 20, 2024 05:26 AM
ஷிவமொக்கா: பத்ராவதியில் அரிசி மில்லில், பாய்லர் வெடித்ததில், ஏழு பேர் காயம் அடைந்தனர்.
ஷிவமொக்கா பத்ராவதியின் சென்னகிரி சாலையில் தனியார் அரிசி மில் உள்ளது. இங்கு 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். நேற்று மாலையில் ஊழியர்கள் வழக்கம் போன்று, பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அரிசியை லோடு செய்யும் போது, மில்லின் பாய்லர் திடீரென வெடித்து சிதறியது. இதில், அரிசி மில் கட்டடம் இடிந்து விழுந்தது. ஏழு ஊழியர்கள் காயம் அடைந்தனர். வெடித்த பாய்லர் துகள்கள், வெகு துாரம் வரை பறந்து விழுந்தன. பல வீடுகள் சேதமடைந்தன.
தகவலறிந்து அங்கு வந்த பத்ராவதி போலீசார், தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்தினர். காயமடைந்த ஏழு பேரையும், மருத்துவமனையில் சேர்த்தனர். இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. பத்ராவதி போலீஸ் நிலையத்தில், வழக்கு பதிவாகியுள்ளது.