பாலியல் குற்றச்சாட்டு: கண்காணிப்பு கேமரா காட்சிகளை மக்களிடம் காட்ட கவர்னர் முடிவு
பாலியல் குற்றச்சாட்டு: கண்காணிப்பு கேமரா காட்சிகளை மக்களிடம் காட்ட கவர்னர் முடிவு
ADDED : மே 09, 2024 06:00 AM

கோல்கட்டா: மேற்கு வங்க கவர்னர் ஆனந்த போஸ் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், கவர்னர் மாளிகையில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை மக்களிடம் காட்ட கவர்னர் முடிவு செய்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு கவர்னராக உள்ள சி.வி.ஆனந்த போஸ் மீது, கவர்னர் மாளிகையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றும் பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்தார்.
இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். விசாரணைக்கு ஒத்துழைக்கும்படியும், கண்காணிப்பு கேமரா காட்சிகளை அளிக்கும்படியும் கவர்னர் மாளிகை அதிகாரிகளிடம் போலீசார் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் போலீசாருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டாம் என, கவர்னர் சி.வி.ஆனந்த போஸ் தன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார். தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு பொய்யானது என நிரூபிக்க, கவர்னர் மாளிகை கண்காணிப்பு கேமரா காட்சிகளை பொது மக்களிடம் காண்பிக்க, கவர்னர் சி.வி.ஆனந்த போஸ் முடிவு செய்துள்ளார்.
அதே சமயம், முதல்வர் மம்தா பானர்ஜி, மாநில போலீசார் மற்றும் எந்த அரசியல்வாதிக்கும் இதை காண்பிக்கப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கவர்னர் மாளிகையில் இன்று நடக்கும் விழாவில், கண்காணிப்பு கேமரா காட்சிகளை, 100 பேருக்கு கவர்னர் சி.வி.ஆனந்த போஸ் காண்பிக்கவுள்ளார்.