ADDED : அக் 29, 2024 07:47 AM

கர்நாடகா பல சிறப்புகளை தன்னுள்ளே அடக்கி வைத்துள்ளது. புராதன மிக்க கோவில்கள், வரலாற்று சிறப்புள்ள திருத்தலங்கள், சுற்றுலா இடங்கள், கடற்கரைகள், அழகான மலைகள், அடர்ந்த கானகங்கள் என, இங்கு இல்லாத இடமே இல்லை.
இந்தியாவின் பிரபலமான சுற்றுலா மாநிலங்களின் பட்டியலில், கர்நாடகா நான்காம் இடத்தில் உள்ளது. மாநிலத்தின் பல்வேறு இடங்களில், அபூர்வமான சிற்பக் கலைகளுடன் கட்டப்பட்ட கோவில்கள், அன்றைய மன்னராட்சியின் சிறப்பு, அவர்களின் கலை ரசனை, ஆன்மிக உணர்வை வெளிப்படுத்துகின்றன. உத்தர கன்னடாவின் சிர்சி, ஷிவமொக்காவின், சாகராவில் இத்தகைய பல கோவில்கள் உள்ளன.
சிர்சி மாரிகாம்பா கோவில்
மாரிகாம்பா கோவில், துர்க்கை அம்மனுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்ட கோவிலாகும். 1689ல் கட்டப்பட்ட கோவிலில் குடிகொண்டுள்ள துர்க்கை மிகவும் சக்தி வாய்ந்தவர் என்பது ஐதீகம். 7 அடி உயரமான விக்ரகம் உள்ளது. துர்க்கை புலி வாகனத்தில் அமர்ந்திருக்கும் வடிவத்தில் செதுக்கப்பட்டுள்ளது.
ஹூப்பள்ளியின் ஹானகல் அருகில் உள்ள குளத்தில், இந்த குளத்தில் விக்ரகம் கிடைத்ததாக புராணங்கள் கூறுகின்றன.
ஆண்டுதோறும் இங்கு நடக்கும் மாரிகாம்பா திருவிழா, மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இதை தொட்டம்மா கோவில் என்றும் அழைக்கிறனர்.
பனவாசி மதுகேஸ்வரா
சிர்சியில் இருந்து 23 கி.மீ., தொலைவில் பனவாசி பட்டணம் உள்ளது. கர்நாடகாவின் மிகவும் பழமையான இடங்களில், இதுவும் ஒன்றாகும்.
வரதா ஆறும், அடர்ந்த வனப்பகுதி சூழப்பட்ட, அற்புதமான பட்டணமாகும். இங்கு புராதனமிக்க 9ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட மதுகேஸ்வரா சிவன் கோவில் அமைந்துள்ளது.
கலை நயத்துடன் காணப்படும் இக்கோவில், கதம்பர் வம்சத்தின் மயூர சர்மா கட்டியதாக கூறப்படுகிறது. கதம்பர்கள் கர்நாடகாவின் மிகவும் பழமையான மன்னர்கள். சாளுக்கியர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன், கதம்பர்கள் ஆண்டனர். மதுகேஸ்வரா கோவில் சாளுக்கியர், ஹொய்சாளர் அரச வம்சத்துக்கு பின், ஆட்சி நடத்திய காலத்தில் பல மாறுதல்கள் செய்யப்பட்டன.
கோவிலில் தேன் நிறத்தில், சிவலிங்கத்தை தரிசிக்கலாம். எனவே, கோவிலுக்கு மதுகேஸ்வரா என, பெயர் வந்தது. தேனுக்கு மது என்றும் மற்றொரு பெயர் உள்ளது. கலை சிற்பங்கள் செதுக்கப்பட்ட நாட்டிய மண்டபங்கள் உள்ளன. இவை சாளுக்கியர், ஹொய்சாளர் பாணியில் அமைந்துள்ளன.
சஹஸ்ர லிங்கம்
சிர்சியின் 17 கி.மீ., தொலைவில் உள்ள புண்ணிய தலத்தில், சஹஸ்ர லிங்கம் உள்ளது. சஹஸ்ர லிங்கம் என்றால், 1000 லிங்கங்கள் என, அர்த்தமாகும். இந்த இடம் ஷால்மலா ஆற்றின் மத்திய பகுதியில் உள்ளது. ஆற்றங்கரையில் பாறைகள் மீது லிங்கங்கள் செதுக்கப்பட்டுள்ளன. தண்ணீருக்கு நடுவில் காணப்படும் லிங்கங்கள், ஆன்மிக உணர்வை அதிகரித்து, மனதை ஒருநிலைப்படுத்தும்.
இந்த லிங்கங்களை கடந்த 1678 - 1718 ம் ஆண்டுகளுக்கு இடையே, சிர்சியை ஆண்ட சதாசிவராயர் அமைத்ததாக புராணங்கள் கூறுகின்றன. இங்கு நந்தி சிற்பங்களையும் காணலாம். மஹா சிவராத்திரி நேரத்தில், லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வருவர். சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடக்கும்.
இக்கேரி அகோரேஸ்வரா
ஷிவமொக்கா, சாகராவில் இருந்து தெற்கே, 6 கி.மீ., தொலைவில் இக்கேரி உள்ளது. இங்கு மிகவும் அற்புதமான அகோரேஸ்வரா கோவில் அமைந்துள்ளது. இந்த சிவன் கோவில் பிரபலமானது. மத்தே நாயக்கர் ஆட்சியில் கட்டப்பட்டுள்ளது.
கிரானைட் பயன்படுத்தி கட்டப்பட்டதாகும். சிறிது உயரமான இடத்தில் உள்ளது. கோவில் முன் நந்தி விக்ரகத்தை காணலாம். கலை சிற்பங்கள், கலை சித்திரங்கள் செதுக்கப்பட்ட துாண்கள் உள்ளன. கோவிலில் லிங்கம் வடிவத்தில் சிவன் தரிசனம் தருகிறார். இங்கு அகிலாண்டேஸ்வரி சன்னிதியும் உள்ளது.
கவுதி ராமேஸ்வரா கோவில்
சாகராவில் இருந்து எட்டு கி.மீ., தொலைவில் கவுதி ராமேஸ்வரா கோவில் அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற புராதன கோவில்களில், இதுவும் ஒன்றாகும். ஒரு காலத்தில் கவுதி, விஜயநகர சாம்ராஜ்யத்தின் கவுதி அரசர்களின் தலைநகராக இருந்தது.
இங்கு திராவிடர், ஹொய்சாளர் பாணியில் கட்டப்பட்ட ராமேஸ்வரா கோவில், பக்தர்களை ஈர்க்கிறது. இதை அரசர் சவுடப்பா நாயக்கர் கட்டியதாக வரலாற்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.
இவர் ராமேஸ்வரா, பார்வதி வீரபத்ரா மற்றும் பார்வதி கோவில்கள் பல சிறப்புகள் கொண்டுள்ளன. இவற்றின் மேற்கூரை மிகவும் அற்புதமானது. பல்வேறு கலை சிற்பங்களை அங்கு காணலாம்.