ADDED : டிச 13, 2025 01:12 AM

புதுடில்லி: காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் தலைமையில் நடந்த கட்சி எம்.பி.,க்கள் கூட்டத்தை, அக்கட்சியின் எம்.பி., யும், மூத்த தலைவருமான சசி தரூர் புறக்கணித்தது, மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
காங்., மூத்த தலைவரும், கேரளாவின் திருவனந்த புரம் தொகுதி எம்.பி.,யுமான சசி தரூர், சமீப காலமாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பா.ஜ.,வை பாராட்டி வருகிறார்.
காங்., மேலிடம் மீது அதிருப்தியில் இருக்கும் அவர், மல்லிகார்ஜுன கார்கே, சோனியா தலைமையில் நடக்கும் கட்சிக் கூட்டங்களையும் புறக்கணித்து வருகிறார்; அதே சமயம், பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் மட்டும் தவறாது பங்கேற்கிறார். காங்கிரசில், சர்ச்சை நாயகனாகவே சசி தரூர் வலம் வருகிறார்.
இந்நிலையில் நேற்று, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் தலைமையில் காங்., - லோக்சபா எம்.பி.,க்கள் குழு கூட்டம் நடந்தது. இதிலும் சசி தரூர் பங்கேற்கவில்லை. தவிர, காங்., சண்டிகர் எம்.பி., மணீஷ் திவாரியும் பங்கேற்கவில்லை.
'கூட்டத் தில் தன்னால் பங்கேற்க முடியாது' என முன்கூட்டியே சசி தரூர், காங்., மேலிடத்துக்கு தகவல் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது. எனினும், அக்கட்சியின் தலைமை கொறடா, 'இது பற்றி தனக்கு எதுவும் தெரியாது' என தெரிவித்துள்ளது, சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
காங்., மேலிடத்தின் முக்கிய ஆலோசனை கூட்டங்களை சசி தரூர் தொடர்ந்து புறக்கணிப்பது, அக்கட்சித் தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அதே சமயம், அவர் பா.ஜ.,வில் இணையப் போகிறாரா என்ற கேள்வியையும் எழுப்புகிறது.

