பிரதமர் மோடி, அதிபர் புடின் பங்கேற்ற விருந்தில் சசி தரூர்; அரசியல் விளையாட்டு என்கிறது காங்கிரஸ்
பிரதமர் மோடி, அதிபர் புடின் பங்கேற்ற விருந்தில் சசி தரூர்; அரசியல் விளையாட்டு என்கிறது காங்கிரஸ்
ADDED : டிச 06, 2025 08:45 AM

புதுடில்லி: ரஷ்ய அதிபருக்கு அரசு தரப்பில் கொடுக்கப்பட்ட இரவு விருந்தில் காங்., எம்பி சசி தரூர் பங்கேற்றது, காங்கிரஸ் கட்சியினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்ய அதிபர் புடினின் இந்திய வருகையின் போது, வெளிநாட்டு தலைவர்களை சந்திக்க எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக காங்கிரஸ் எம்பி ராகுல் மற்றும் ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் குற்றம்சாட்டினர்.
ஆனால், அதிபர் புடினுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கிய விருந்தில் கலந்து கொள்ள பார்லி வெளிவிவகாரக் குழு தலைவரான காங்., எம்பி சசி தரூருக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதனை ஏற்று சசி தரூரும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அதன்பிறகு, பிரதமர் மோடி மற்றும் ரஷ்ய அதிபர் புடின் இடையிலான நட்புறவை காங்கிரஸ் எம்பி சசி தரூர் பாராட்டியுள்ளார். அவர் கூறியதாவது; வெளியுறவுக் கொள்கையில் புராதான சின்னங்கள் மற்றும் செயல்திறன் என்பது மிகவும் முக்கியமானது. புரான சின்னங்கள் நம் வெளியுறவுக் கொள்கை அணுகுமுறையின் முக்கியமான ஒன்றாகும்.
விமான நிலையத்திற்கு சென்று ரஷ்ய அதிபர் புடினை வரவேற்ற பிரதமர் மோடி, பிறகு இரவு விருந்து கொடுத்தார். அப்போது, ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட கீதையை நினைவு பரிசாக வழங்கினார். இது புராதான சின்னங்களை பெருமைப்படுத்தும் நடவடிக்கையாகும். ரஷ்யாவுடனான ஒரு முக்கியமான உறவின் தொடர்ச்சிக்கான ஒரு முக்கியமான அறிகுறி என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை, இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையே, சசிதரூருக்கு விடுக்கப்பட்ட அழைப்பு குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கெரா கூறியதாவது; எதிர்க்கட்சியின் தலைமைக்கு அழைப்பு விடுக்காத நிலையில், எனக்கு மட்டும் அழைப்பு விடுப்பது ஏன்? இதில் ஏதேனும் அரசியல் விளையாட்டு நடக்கிறதா? அதில் நான் ஏன் பங்கேற்க வேண்டும் என்று அவர் (சசிதரூர்) கேட்டிருக்க வேண்டும்.
ஆனால், அப்படி செய்யாமல் அழைப்பை ஏற்றது ஆச்சர்யமளிக்கிறது, எனக் கூறினார்.சசி தரூருக்கு ஆதரவாக பாஜ எம்பி மனோஜ் திவாரி கூறுகையில், 'காங்கிரஸ் தலைமை ஏன் இதைக் கண்டிக்கிறது என்று எனக்குப் புரியவில்லை. வெளியுறவுக் கொள்கையில் பலரும் பங்களித்துள்ளனர். இது ஒரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயம்,' என்றார்.

